சினிமா படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் வழியாக புறக் கலாசாரங்கள் பரவுவதை எதிர்த்து தமிழ் கலைஞர்கள் சங்கம் தாக்கல் செய்த உரிமைகள் மனு தொடர்பில் ஜூலை 11ஆம் திகதி, நீதிமன்றில் ஆஜராகுமாறு வெகுஜன ஊடக அமைச்சுக்கு உயர்நீதிமன்றம், நேற்று வெள்ளிக்கிழமை கட்டளை அனுப்பியுள்ளது.
இந்த வழக்கை, மேலும் நியாயப்படுத்துவதற்கான திகதியாக ஜூலை 11ஆம் திகதியை உயர்நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான ஈவா வனசுந்தர, சிஸரா ஜே.டி. அப்றூ மற்றும் அனில் குணவர்தன ஆகியோர் கொண்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே அக்குழாம் மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.
தொலைக்காட்சி ஹிந்தி நாடகங்களை தமிழில் டப்பிங் செய்து காட்சிப்படுத்துவதற்கான வரிகளுக்கான கட்டணங்களை அறிவிக்குமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்கவேண்டும் எனக்கோரி தமிழ் கலைஞர் சங்கத்தினரான எம்.ஜ. தவ்பீக், கந்தன் முருகேசு மற்றும் பி.எஸ் சுந்தரம் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வரிகளுக்கான கட்டணங்கள் மற்றும் வரிகள் உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கவும் புறக் கலாசார விழுமியங்களை பரப்பும் தொலைக்காட்சி நாடகங்கள் ஒளிபரப்புவதை குறைக்கவும் அறவிடப்படுவதாக அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.