தேர்தல் வாக்குக்காக தமிழினத்தைக் காட்டிக்கொடுக்கிறார் அமைச்சர் டக்ளஸ். அத்துடன் எமது மக்களை மஹிந்தவிடம் அடிமைப்படுத்தும் வேலையையும் அவர் மேற் கொள்கிறார்.
தமிழினத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் இவர்களை ஆதரிக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பிரசாரக் கூட்டம் புத்தூரில் நேற்றுத் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரி வித்ததாவது:
எமது இனத்தின் இருப்பை முற்றாக அழிப்பதற்காகவே இராணுவம் இங்கு நிறுத்தப்பட்டிருக்கிறது. போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் எமது இனத்தை இல்லாதொழிக்கும் திட்டமிட்ட இன அழிப்பை இந்த அரசு முன்னெடுக்கிறது. இந்த மாகாண சபையும் அரசின் கைகளுக்குச் சென்றுவிட்டால் அவர்களின் நிகழ்ச்சி நிரல் தங்குதடையின்றி முன்னெடுக்கப்படும்.
அபிவிருத்தி என்று ஆளும் தரப்பினர் தொடர்ச்சியாக கோசம் எழுப்பி வருகின்றனர். மூன்று லட்சம் மக்களை அகதிகளாக்கி நடுத் தெருவில் விட்டதுதான் உங்கள் அபிவிருத்தியா? அந்த மக்களின் வயிற்று எரிச்சல் உங்களை சும்மா விடாது.
நாங்கள் வடமாகாண சபையின் அதிகாரங்களை அதிகரிக்கவும் தக்கவைக்கவும் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருக்கின்ற அதிகாரங்களையும் மாகாண சபையிடம் இருந்து பிடுங்கி மஹிந்தவிடம் கையளிக்கிறார். வடக்கில் 5 ஆயிரம் பேரை பொலிஸ் வேவைக்கு நியமிக்க ஜனாதிபதி மஹிந்தவிடம் டக்ளஸ் கோரிக்கை வைத்திருக்கிறார். எங்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது நல்ல விடயம்.
ஆனால் நாங்கள் மாகாண சபையிலுள்ள பொலிஸ் அதிகாரத்தைப் பயன்படுத்தி வழங்க வேண்டிய வேலையை மஹிந்தவிடம் போய் கேட்கத் தேவையில்லை.
மாகாண சபைக்கு இருக்கின்ற பொலிஸ் அதிகாரத்தைப் பறிக்க நினைக்கின்ற சிங்களப் பேரினவாதிகளிடம், எங்கள் தமிழினத்தை விற்கப் பார்க்கிறார் டக்ளஸ்.
நாங்கள் வடமாகாண சபையை கைப்பற்றி எங்களுக்குள்ள பொலிஸ் அதிகாரங்களைப் பயன்படுத்தி 5 ஆயிரம் பொலிஸாரை என்ன 10 ஆயிரம் பொலிஸாரையும் இணைத்துக்கொள்ள முடியும்.
ஆனால் டக்ளஸ் தேவானந்தா எங்கள் இனத்தைக் காட்டிக்கொடுத்து அடிமைப்படுத்தும் மிகக் கேவலமான வேலைகளைச் செய்கிறார் என்றார்.