தமிழ் அரசியல் கைதிகள் 2வது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டம்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று (13) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

தம்மை விரைவில் விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் கைதிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு மெகஸின், அனுராதபுரம் உள்ளிட்ட பல சிறைச்சாலைகளிலும் கைதிகள் உணவை புறக்கணித்து உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணைாயாளர் நாயகம் ரோஹன புஷ்குமார தெரிவித்துள்ளார்.

கைதிகள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை கையளித்துள்ளதாவும் அவர் கூறினார்.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தமாக 201 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 197 ஆண்களும் 04 பெண்களும் அடங்குகின்றனர்.

இவர்களில் 40 பேர் நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டவர்கள் என்பதுடன், 161 பேர் தொடர்பிலான சட்ட நடவடிக்கை இடம்பெற்றுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கூறினார்.

இவர்களில் 109 பேர் மெகஸின் சிறைச்சாலையிலும், 30 பேர் அனுராதபுரம் சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனையவர்கள் வெலிக்கடை, போகம்பர, திருகோணமலை, களுத்துறை, மட்டக்களப்பு,பதுளை, காலி, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், பொலன்னறுவை, மற்றும் மொனராகலை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே உள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

Related Posts