தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் சட்டமா அதிபரின் அறிக்கையை எதிர்பார்க்கின்றது அரசு!

தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட அனுமதிக்க முடியாது எனவும், அவர்களின் விடுதலை குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது. ஆனால், அரசியல் கைதிகள் குறித்து சட்டமா அதிபரின் அறிக்கையை தாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், குறித்த அறிக்கையின் பிரகாரமே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் 14 பேர் மகஸின் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுவரும் நிலையில், இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்றுமுன்தினம் மாலை மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, இந்து மத விவகாரம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவிக்கையில்,

“தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களின் நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதனை அவருடைய அமைச்சில் வைத்து சந்தித்தேன்.

இதன்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் குறித்து பல்வேறு விடயங்களை அமைச்சரிடம் தெளிவுபடுத்தினேன்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபட அனுமதிக்க முடியாது எனவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன்.

இதன்போது சட்டமா அதிபரின் அறிக்கையை தாம் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும், குறித்த அரசியல் கைதிகள் அனைவருக்கும் புனர்வாழ்வு அழிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் தாம் மேற்கொள்ளுவதாகவும், ஆனால் அரசியல் கைதிகள் அனைவரும் புனர்வாழ்வு பெற்றுக்கொள்ள சம்மதிப்பார்களா எனத் தெரியாது எனவும் அமைச்சர் கூறினார்.

புனர்வாழ்வு பெற்றுக்கொள்ள சிலர் சம்மதிக்கின்றனர் எனவும், சிலர் மறுப்புத் தெரிவிக்கின்றார்கள் எனவும், அவ்விடயம் தமக்கு பிரச்சினையாக இருக்கின்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும், சகல அரசியல் கைதிகளுக்கும் புனர்வாழ்வு வழங்கப்படும் என ஒருமித்த முடிவை எடுத்து அதனை அரசியல் கைதிகளிடம் தெரிவிக்கின்றபோது அதற்கு அவர்கள் சம்மதிக்க முடியும் என அமைச்சரிடம் தெரிவித்தேன்.

அதனை விடுத்து அவர்களுக்கு உரிய பதில் எதனையும் கூறாது விட்டால் அவர்கள் இப்படிப்பட்ட முடிவுகளையே எடுக்கவேண்டியுள்ளது எனவும், மகஸின் சிறையில் 14 தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் குறிப்பிட்டேன்.

எனவே, அவர்களின் விடுதலை குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சரிடம் அவசர வேண்டுகோள் விடுத்தேன்” – என்றார்.

Related Posts