தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: நவம்பர் 7ற்கு முன்னர்முடிவு : சம்பந்தனிடம் ஜனாதிபதி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தரத் தீர்வு பெற்றுத் தரப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் நேற்று(16.10.2015) உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான நல்லாட்சி அரசு பொதுமன்னிப்பில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால் கைதிகளில் பலரின் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்றுக் காலை அவசர சந்திப்பு நடைபெற்றது.

நீதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.

இதன்போது தமிழ் அரசியல் கைதிகள் சார்பில் அவர்களின் கோரிக்கைகளை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும், சுமந்திரன் எம்.பியும் நீதியமைச்சரிடம் முன்வைத்ததுடன், அவர்களை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தினார்.

5 நாட்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதனால் அரசியற் கைதிகளின் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதையும், நேற்றுக் காலைவரை 33இற்கும் மேற்பட்ட கைதிகள் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதையும் அரசு கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் நீதி அமைச்சரிடம் சம்பந்தனும், சுமந்திரனும் தெரிவித்தனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளை விடுவித்தது போன்று அப்பாவிகளான தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் விடுதலை விவகாரம் தொடர்பில் அரசு தெளிவான தீர்மானத்தை உடன் அறிவிக்க வேண்டும் எனவும் சம்பந்தனும், சுமந்திரனும் நீதி அமைச்சரிடம் வலியுறுத்தினர்.

அதன்போது நீதி அமைச்சர் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு உடனே கூட்டமைப்பினர் முன்னிலையில் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசினார்.

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோள்களையும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதி அமைச்சர் தெரிவித்தார்.

அதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுடன் ஜனாதிபதி தொலைபேசியில் பேசினார். இதையடுத்து குறித்த விவகாரத்திற்கு நிரந்தரத் தீர்வு பெற்றுத் தருவதாகவும் இதற்காக மூன்று வாரகால அவகாசம் தேவைப்படுகின்றது எனவும், எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார்.

நேற்றைய சந்திப்புக் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுடன், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வேண்டி மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து நேரில் சந்தித்துப் பேச்சுகளை மேற்கொண்டிருந்த போது அவர் எமது முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தினார்.

அதன் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடனும் ஜனாதிபதி தொலைபேசியில் பேசினார். இம்மாத இறுதிக்குள் கைதிகள் தொடர்பாக விடயங்களைக் கவனத்தில் எடுத்து பொறிமுறையொன்று உருவாக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் அவ்விடயம் தொடர்பாக தீர்க்கமான தீர்மானம் எடுக்கப்பட்டு அவர்களின் கோரிக்கை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னதாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்திற்கு நிரந்தரத் தீர்வு பெற்றுத்தரப்படும் என்று ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதா, பொது மன்னிப்பளித்து அவர்களை விடுதலை செய்வதா அல்லது வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதா என்பது குறித்து ஜனாதிபதி எதுவும் தெரிவிக்காதபோதும் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னதாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்திற்கு நிரந்தரத் தீர்வு பெற்றுத்தரப்படும் என்று உறுதியளித்துள்ளார் என்றார்.

Related Posts