தமிழ் அரசியல் கைதிகள் மூவர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் மூவர் இன்று குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பிணையில் விடுதலை செய்யப்பட்ட 39 அரசியல் கைதிகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 21 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில் பிணையில் விடுதலையான 39 பேர் தொடர்பிலான வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் அவர்களில் மூவர் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்து விடுதலை செய்தார்.

மேலும் அவர்களில் 14 பேருக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்த நீதவான் மீதமான 22 பேர் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில் புனர்வாழ்வு உத்தரவை கைதிகள் ஏற்றுக்கொண்ட போதிலும், புனர்வாழ்விற்கு செல்வதற்கென கால அவகாசம் தேவை எனவும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி புனர்வாழ்விற்கு செல்வதற்கான ஆயத்தங்களுடன் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள 21 அரசியல் கைதிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிணையில் விடுதலையான கைதிகள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அவர்கள் வசிக்கும் பிரதேசத்திற்கு அருகில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவை தளர்த்திய நீதிமன்றம் மாதத்தி்ற்கு ஒருமுறை கையெழுத்திட்டால் போதுமென அறிவித்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related Posts