தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காமல் நல்லிணக்கம் சாத்தியமில்லை : சம்பந்தன்

தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நீதியான விசாரணைகளும் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைத்துக்கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே சம்பந்தன் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் அநீதியானது என தெரிவிக்கும் அரசாங்கம் குறித்த தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகளை, யுத்தம் நிறைவடைந்து 7 வருடங்களாகியும் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்த சம்பந்தன், இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் தனது தெளிவான நிலைப்பாட்டை வெளியிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கும் கடந்த 1988 மற்றும் 1989 காலப்பகுதிகளில் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி கிளிநொச்சியில் போராட்டம் நடத்தியவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியுமென்றால் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் ஏன் இந்த பாரபட்சம் எனவும் சம்பந்தன் கேள்வியெழுப்பினார்.

இந்நிலையில், அரசியல் கைதிகள் மீது வழக்குத் தொடராமல் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் கடந்த அரசாங்கத்தைப் போன்று தொடர்ந்து அவர்களை தடுத்து வைத்திருப்பதானது தேசிய நல்லிணக்கத்திற்கு பாதகமாக அமையுமென குறிப்பிட்ட சம்பந்தன், வழக்குத் தொடர்ந்தாலும் தொடராவிட்டாலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் செய்யாவிட்டாலும் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேலும் தெரிவித்தார்.

Related Posts