நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியில் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உறவுகளை விடுவிக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தி மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை 7 மணிக்கு முனியப்பர் கோவில் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினர்களும் கோரி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தங்களை விடுவிக்க வலியுறுத்தி அவர்களும் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கைதிகளின் உடல் நிலை மோசமடைந்து வருகின்றது. எனவே அவர்களை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களை விடுவிக்க வலியுறுத்தியுமே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவிருக்கின்றது.
இப் போராட்டத்தில் இங்குள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகள் உட்பட அனைத்துத் தரப்பினர்களையும் பங்கு கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.