தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி!

சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் அவர்களின் விடுதலையை விரைவு படுத்த வலியுறுத்தியும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும், ஏனைய அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த வலியுறித்தியும் யாழ் பல்கலைக்கழக சமூகத்தால் அண்மைக்காலமாக தொடர்சியான கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ் விடயம் தொடர்பில், அதிகாரத்தில் உள்ள பலராலும் பல வாக்குறுதிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அவை பொய்த்துப்போன நிலையில் மாணவர்கள் ஜனநாயக ரீதியில் இவ் விடயத்தை சர்வதேச மட்டத்தில் எடுத்துச்செல்லும் முயற்சியிலும் அரசுக்கு தொடர்சியான அழுத்தங்களைக் கொடுத்தும் குறித்த அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றும் வரையில் தமது போராட்டங்களை எடுத்துச்செல்லத் தீர்மானித்துள்ளனர்.

அந்த வகையில் நாளை இந்த மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதில் அனைத்து மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்கள், அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு யாழ் பல்கலை மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts