தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராயும் விசேட மாநாடு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்ற நிலையில் பிரதமர் தலைமையி லான இன்றைய மாநாடு தீர்க்கமான முடிவொன்றை மேற்கொள்ளும் களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர்கள், சட்டத்துறை அதிகாரிகள் சிறைச்சாலை அதிகாரிகள், உட்பட துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் இம் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஏற்கனவே இரண்டு தடவைகள் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இம்முறை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையுடன் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்க்கமான முடிவொன்றை எட்ட முடியும் என அமைச்சரொருவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அமைச்சர்கள் மனோ கணேசன், விஜயதாஸ ராஜபக்ஷ, திலக் மாரப்பன, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சட்ட மா அதிபர், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர், சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நேற்று கூற்றொன்றை வெளியிட்டுள்ள சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் திலக் மாரப்பன தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்.
அவர்கள் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்படமாட்டார்களென குறிப்பிட்டுள்ள அமைச்சர் மாரப்பன மாறாக அவர்களது பிரச்சினைக் குத் தீர்வு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.