தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தற்போது தீவிர நிலையை எட்டியுள்ளது.
அநுராதபுரம் சிறைச்சாலையின் வெறும் எட்டு கைதிகளினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி அந்த எண்ணிக்கை தற்போது 59ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, கண்டி போகம்பர சிறைச்சாலையில் ஆறு கைதிகளும், கொழும்பு மகசின் சிறைச்சாலையில் 43 கைதிகளும் இன்று (புதன்கிழமை) தமது தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை சுமந்திரன் கொலை முயற்சி சந்தேகநபர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தம்மை விடுதலை செய்யுமாறு அல்லது குறுகிய கால புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்குமாறு வலியுறுத்தி அநுராதபுரம் சிறையிலுள்ள அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த மாதம் 14ஆம் திகதி தமது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். பின்னர் குறித்த போராட்டத்தில் மேலும் இருவர் இணைந்துக் கொண்டனர்.
இதேவேளை, அநுராதபுரம் சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.
குறித்த அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் மகசின் சிறைச்சாலை கைதிகள் ஏற்கனவே ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.