தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் உள்ள சிக்கல்களாக, ஜனாதிபதி கூறும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஆயுள் தண்டனை பெற்றுள்ள தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த போதே சுமந்திரன் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.
ஆனந்த சுதாகரின் விடுதலை, ஜனாதிபதி கையிலேயே உள்ளதென சுமந்திரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இவ்விடயம் தொடர்பாக தான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியபோது, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி உள்ளாரென சுமந்திரன் தெரிவித்தார். எனினும், அதில் காணப்படும் இழுபறிகள் தொடர்பாக வினவியபோது ஜனாதிபதி சில காரணங்களை குறிப்பிட்டதாகவும், அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
இதேவேளை, அரசாங்கத்திற்குள் தற்போது காணப்படும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட பின்னர், தம்முடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவாரென ஜனாதிபதியின் செயலாளர் வாக்குறுதி வழங்கியுள்ளதாகவும் சுமந்திரன் இதன்போது தெரிவித்தார்.