தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதுவும் செய்ய முடியாது : சுவாமிநாதன்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தன்னால் எதுவும் செய்ய முடியாதென சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தமது அமைச்சின் கீழ் அதற்கான அதிகாரம் இல்லையென தெரிவித்த அமைச்சர், நீதி அமைச்சே இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிட்டார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர் கடந்த மூன்று தினங்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக, யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென்பதில் தாம் அதிக கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன், இவ்விடயத்தை கையாள்வதற்கான அதிகாரம் தமக்கு வழங்கப்பட்டிருக்குமாயின் ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்க முடியுமென்றும் கூறியுள்ளார்.

Related Posts