தமிழ் அரசியல் கட்சிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்! : யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில், தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டுமென யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தின் சமகால செயற்பாடுகள் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் கே.கிருஷ்ணமேனன் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தியிருந்த நிர்வாக முடக்கல் போராட்டத்தைத் தொடர்ந்து, மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன. தற்போது மாணவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ள நிலையில், எதிர்வரும் 13ஆம் திகதிமுதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

கல்வி நடடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழகத்திற்குள் அமைதியான முறையில் அரசியல் கைதிகளுக்காக போராட்டம் நடத்துவோம் என்று மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டியதன் தேவை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய தரப்பினருடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. எனினும், அரசியல் கைதிகள் விடயத்தில் முழுமையான தீர்மானம் இன்னும் எட்டப்படவில்லை.

Related Posts