தமிழ் அகதிகள் 153 பேரையும் ஆஸி. இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கும்!

aust-falgஆஸ்திரேலியாவுக்கு அப்பால் கொக்கோ தீவுகளுக்கு நெருக்கமாக ஆஸ்திரேலிய கடற்படையால் வழிமறித்துத் தடுக்கப்பட்ட அகதிகள் கப்பலில் இருக்கும் 153 தமிழ் அகதிகளும் கடல் சீற்றம் மிக்க நடுக்கடலில் வைத்து இலங்கைக் கடற்படைக் கப்பலுக்கு மாற்றப்பட்டு, இலங்கைக் கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளனர் என்று அந்நாட்டுப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்படி அகதிகள் விடயத்தை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் பல நாட்கள் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து அகதிகளைப் பொறுப்பேற்று வருவதற்காக இலங்கைக் கடற்படையின் கப்பல் ஒன்று ஆஸ்திரேலியா நோக்கி நேற்றுப் புறப்பட்டுள்ளதாகவும் ஆஸ்திரேலியப் பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன.

‘எனக்குத் தெரிந்ததெல்லாம் எங்களின் ஒரு கப்பல் இதற்காக ஏற்கனவே புறப்பட்டுவிட்டது என்பதுதான். ஆஸ்திரேலியக் கப்பலில் இருந்து மக்களை நாங்கள் ஏற்றுவதுதான் முன் ஏற்பாடு. அவர்கள் சிவிலியன் கப்பலில் இருந்தா அல்லது ஆஸ்திரேலிய கடலோரக் காவல் படையின் படகிலிருந்தா மாற்றப்படுவார்கள் என்பது எமக்குத் தெரியாது. ஆனால் கடும் மோசமான நிலையில் இருக்கும் கடலில் ஒரு கப்பலில் இருந்து மற்றக் கப்பலுக்கு ஆட்களை மாற்றுவது என்பது மிகக் கஷ்டமான பணியாக இருக்கும்.” – என்று இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என ஆஸி. செய்திகள் தெரிவித்தன.

153 இலங்கைத் தமிழ் அகதிகளுடன் இந்தியாவின் பாண்டிச்சேரிக் கரையோரத்தில் இருந்து கடந்த 13 ஆம் திகதி புறப்பட்ட இந்த அகதிகள் கப்பல் கிறிஸ்மஸ் தீவுக்கு சுமார் 250 கிலோ மீற்றர் தொலைவில் வைத்து ஆஸ்திரேலிய அதிகாரிகளால் வழிமறிக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது.

Related Posts