இந்தோனேஷியாவின் ஆச்சே பிராந்தியத்தில் தரைதட்டிய அகதிகள் படகு திருப்பி அனுப்ப முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளதால் அந்தப் படகில் வந்த ஈழத் தமிழர்கள் குறித்த படகில் ஏற்றப்பட்டு திருப்பி அனுப்பப்படலாம் என்றிருந்த அச்சம் நீங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் 44 தமிழ் அகதிகளையும் நாடு கடத்துவதற்காக அவர்களுக்கு தற்காலிக கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொடுக்குமாறு, இலங்கை, இந்திய தூதரகங்களிடம் இந்தோனேஷிய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஈழத் தமிழ் அகதிகள் 44 பேர் பயணித்த அகதிகள் படகொன்று கடந்த 11 ஆம் திகதி இந்தோனேசியாவின் ஆச்சே பிராந்தியத்தின் கரையைத் தட்டியது. கடந்த பத்து நாட்களாக ஆச்சே பிராந்தியத்தின் வடபகுதியிலுள்ள கரையில் ஒதுங்கியுள்ள படகிலிருந்த ஈழத் தமிழர்களுக்கு படகைவிட்டு தரையிறங்க முதலில் அனுமதி மறுத்துவந்த இந்தோனேஷிய அரசு கடந்த சனிக்கிழமை 18 ஆம் திகதி கரையிலிருந்து ஐம்பது மீற்றர் தொலைவில் அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டில்களில் தங்கவைத்துள்ளது.
எனினும் குறித்த அகதிகளை சந்திப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகப் பிரதிநிதிகள் உட்பட சர்வதேச தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்க மறுத்த இந்தோனேஷிய அரசு நேற்று அகதிகளை சந்திப்பதற்கு தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கியது.
இரண்டு மாதக் குழந்தை உட்பட ஒன்பது குழந்தைகள், கர்ப்பிணித் தாய் ஒருவர் உட்பட 15 பெண்கள் அடங்களாக 44 ஈழத் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டில்களுக்குள் செல்வதற்கு தமக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இந்தோனேசியாவுக்கான வதிவிடப் பிரதிநிதி தோமஸ் வர்காஸ் அதனால் தாம் கடற்கரையிலேயே அகதிகளை சந்தித்ததாக தெரிவித்தார்.
அதேவேளை தமிழ் அகதிகள் பயணம்செய்த படகு திருத்தமுடியாத அளவிற்கு மோசமாக பழுதடைந்து கடற்கரையில் புதைந்துள்ளதாகக் கூறிய வர்காஸ் இதனால் ஈழத் தமிழ் அகதிகளை அனைத்து வசதிகளுடனும் கூடிய ஒரு இடத்தில் தங்கவைக்குமாறு இந்தோனேஷிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இவ்வாறு செய்வதால் குறித்த ஈழத் தமிழ் அகதிகளை பதிவுசெய்து அவர்களுக்கான அகதிகளுக்கான அடையாள அட்டை உட்பட ஏனைய வசதிகளை செய்துகொடுக்க தாம் நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இந்தோனேசியாவுக்கான வதிவிடப் பிரதிநிதி தோமஸ் வர்காஸ் தெரிவித்தார்.
இதேவேளை ஈழத் தமிழ் அகதிகளை பொறுப்பேற்பதை தொடர்ந்து நிராகரித்துவரும் இந்தோனேஷிய அரசு குறித்த அகதிகளை எப்படியாவது நாட்டிலிருந்து வெளியேற்றும் முயற்சிகளிலேயே தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன. ஈழத் தமிழர்கள் வந்த படகிலேயே திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இந்தோனேஷிய அதிகாரிகள் அந்தப் படகு சேதமடைந்து ஆச்சே பிராந்திய கரையில் புதைந்து வருவதால் படகில் திருப்பி அனுப்பும் யோசனையை கைவிட்டுள்ளன.
எனினும் ஈழத் தமிழர்களை விமானம் ஊடாக நாடு கடத்துவது குறித்து ஆராய்ந்துவரும் இந்தோனேஷிய அதிகாரிகள் ஜகர்தாவிலுள்ள சிறிலங்கா மற்றும் இந்திய தூதரகங்களை தொடர்புகொண்டு ஈழத் தமிழ் அகதிகள் 44 பேருக்கும் தற்காலிக கடவுச் சீட்டுக்களை வழங்க முடியுமா என கோரிக்கை விடுத்துள்ளனர்.