தமிழ்மக்கள் பொறுமை இழந்துவிட்டனர்: இரா. சம்பந்தன்

காணி விவகாரத்தில் தமிழ்மக்கள் பொறுமை இழந்துவிட்டனர் எனவே சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என ஐ.நா. செயலாளர், மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் வெளிநாட்டு தூதரங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்மந்தன் அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில், தமிழ் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் குடியிருப்பது நல்லிணக்கத்திற்கு சாதகமான சமிக்ஞை அல்ல என்றும் தமிழ் மக்கள் பொறுமை இழந்துவிட்டார்கள் என்றும் அதனால் சர்வதேச சமூகம் இனியும் பார்த்துக் கொண்டிராமல் தலையீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் கோப்பாப்பிலவில் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலையில் அம்மக்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இது குறித்து ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு இரா. சம்பந்தன் கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.

குறித்த கடிதத்தில், கேப்பாப்பிலவு காணி தொடர்பில் கூட்டம் நடத்துமாறும், ஜனாதிபதியை சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறும், சம்பந்தன் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் அவருடைய கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்கவில்லை.

இவ்வாறான நிலையில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டை நாடியுள்ளார் சம்பந்தன். மேற்படி சர்வதேசத்தின் தலையீட்டை கோரி அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பிய கடிதங்களின் பிரதிகளையும் இணைத்து அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts