தமிழ்மக்கள் தீர்வுத்திட்ட வரைபு ஐநாவிடம் கையளிப்பு!

இலங்கைக்கான ஐநா வதிவிடப்பிரதிநிதி உனா மக்கோளி தலைமையிலான குழுவுக்கும் தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இருதரப்பினரும் பரஸ்பரம் வெளிப்படைத் தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு எவ்வாறு சர்வதேசம் தற்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கத்தை பலப்படுத்தல் மற்றும் செயல்படுத்தல்களில் பொறுமை காத்தல் என்ற கோணத்தில் செயற்படுவதும் அதில் ஐ.நா.இன் நடுநிலைத்தன்மையும் பேரவையினரிற்கு எடுத்துக்கூறப்பட்டது.

ஐநா சபையின் நடுநிலைத்தன்மையை ஏற்றுக்கொண்ட பேரவையினர், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு, போரில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்புக்கூறலும், அதற்கு நீதியான விசாரணை நடாத்தப்படவேண்டிய அவசியத்தையும் எடுத்துக்கூறினர்.

மேலும், ஏன் தமிழர்கள் சர்வதேச விசாரணையை வேண்டி நிற்கின்றனர் என்பதை வரலாற்றுப் படிப்பினையின் அடிப்படையில் விளங்கப்படுத்தியதுடன், தமிழர்கள் சிறீலங்காவில் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்காக தமிழர்களின் பொறுமையையும் வரலாற்றையும் தெளிவுபடுத்தினர். அத்துடன் நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் என்பது முதலில் பொறுப்புக்கூறலிலிருந்தே ஆரம்பிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினர்.

அத்துடன் பேரவையின் பொறுப்புக்கூறலுக்கான உபகுழுவின் செயற்திட்டங்களும் விரிவாக விளங்கப்படுத்தப்பட்டது.

இச்சந்திப்பின் நிறைவில் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு ஐநா வதிவிடப் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டது.

Related Posts