போரில் தமது கணவரையும், பிள்ளைகளையும் இழந்து ஆதரவற்றிருக்கும் வடக்குத் தமிழ்ப் பெண்களுக்குப் புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்த அரசு மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்கள் மகிழ்ச்சிக்குரியவையல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
“சீனத் தொழில்நுட்பத்துடன் செய்மதியை விண்ணுக்கு அனுப்புவதற்கு 4 ஆயிரத்து 200 கோடி ரூபாவை செலவிட்ட அரசு, ஜனாதிபதியின் செலவுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் 740 கோடி ரூபாவை ஒதுக்கியஅரசு, நாட்டில் 71 சதவீதமுள்ள பெண்கள், சிறுவர்கள் நலன்கருதி வெறும் 10 கோடி ரூபாவை மட்டுமே ஒதுக்கியுள்ளது” என்று ஐ.தே.கவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இந்தத் தொகை அவர்களின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு எந்தளவிற்குப் போதுமானதாக அமையும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஜே.ஆர்.ஜெயவர்த்தன மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற “பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம்’ என்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாட்டில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன, இதைத் தடுப்பதற்கு மக்களின் உணர்வுபூர்வமான பங்களிப்பு மிகக் குறைவானதாகவே உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
“கடந்த 5 வருடங்களில் பெண்கள், சிறுவர் துஷ்பிரயோகம் நாட்டில் அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு 10 முதல் 12 வரையான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.” “நாட்டில் 71 சதவீதமாக இருக்கின்ற பெண்கள், சிறுவர்களுக்கு அடுத்தாண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் கிடைக்கும் நன்மை என்ன?
வடக்கிலுள்ள பெண்கள் போரால் தமது கணவர்மாரையும், பிள்ளைகளையும் இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கின்றனர். இவர்களுக்குப் புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்த அரசு மேற்கொள்ளும் வேலைத்திட்டங்கள் மகிழ்ச்சிக்குரியவை அல்ல. அத்துடன், கஹவத்தையில் இடம்பெற்றுவருகின்ற தொடர் கொலைகள் குறித்து அரசு வெட்கம் அடையவேண்டும். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டும் இது தொடர்கின்றது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழித்து அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவோம் என்று ஏட்டளவில் எழுதி வைத்திருந்தால் மட்டும் போதாது. அதற்காகக் குரல் கொடுக்கவும் வேண்டும் என்றார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாட்டில் அதிகரித்துச் செல்கின்றன; தடுப்பதற்கு மக்களின் உணர்வுபூர்வமான பங்களிப்பு மிகக் குறைவாகவுள்ளது