தமிழ்நாட்டில் இருந்து கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை தருவிக்க நடவடிக்கை

மலையகத்தில் கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் பல முயற்சிகளை எடுத்தாலும் அதற்கு பல முட்டுக்கட்டைகள் வருகின்றது. மேலும் எங்களிடமும் கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை. எனவே இதற்கு ஒரு தீர்வாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வருவதற்கு தற்பொழுது இந்திய தூதரகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மீபேயில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் தேசிய கல்வி நிறுவனத்தில் இன்று காலை (03.05.2017) இடம்பெற்ற பெருந்தோட்ட பாடசாலைகள் சம்பந்தமான கலந்துரையாடலின் பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் திருமதி. சபாரஞ்சனி தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்,

தற்பொழுது மலையகத்தில் 25 கணித விஞ்ஞான பாடசாலைகளும் அது தவிர மேலும் 35 பாடசாலைகளும் அபிவிருத்தி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு வளங்களை பெற்றுக் கொடுக்க முடியும். குறிப்பாக பாடசாலைகளின் கட்டிட வசதி மலசலகூட வசதிகள், நீர் வசதிகள் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் போன்ற விடயங்களை பூர்த்தி செய்ய முடியும். ஆனால் கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களின் குறைபாடுகளை தீர்ப்பதற்கு நாம் பல முயற்சிகளை மேற்கொண்ட பொழுதும் அது எதுவும் நிறைவு செய்ய முடியவில்லை.

நாங்கள் வடக்கு, கிழக்கில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. ஒய்வுபெற்ற ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடு செய்தோம் அதுவும் முடியாமல் போய்விட்டது. எனவே இதற்கு என்ன தீர்வு என்று யோசித்த பொழுது அண்மையில் நான் இது தொடர்பாக இந்திய தூதரகத்திடம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினேன்.

இந்த கலந்துரையாடலின் பொழுது இது தொடர்பான என்னுடைய கோரிக்கையை அதாவது இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை பெற்றுத் தர வேண்டும் என அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதனை செய்ய முடியும் என அவர்கள் என்னிடம் கூறினார்கள். இந்த விடயம் தொடர்பாக முறையாக மகஜர் ஒன்றை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார்கள். நாம் இந்த மகஜரை தற்பொழுது தயாரித்து வருகின்றோம். மிக விரைவில் இதனை நான் இந்திய தூதுவரிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

எனவே அந்த ஆசிரியர்களை பெற்றேனும் எமது இந்த பிரச்சினைககு தீர்வு காண வேண்டும். ஏனெனில் நாம் இதனை பேசிக் கொண்டு இருப்பதால் எந்தவிதமான ஒரு பயனும் இல்லை. இந்திய ஆசிரியர்களின் வருகையின் மூலமாக எமது இந்த 25 பாடசாலைளையும் அபிவிருத்தி செய்ய முடியும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts