தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அங்கஜன் சவால்!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தனது தேர்தல் பிரச்சாரப் பணிக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் உறுதிப்படுத்தினால் தான் தேர்தலில் இருந்து விலகுவதற்கு தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த விடையத்தை நிரூபிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவறினால் தேர்தலில் இருந்து விலகுவதற்கு தயாராக இருக்கின்றனரா? என்றும் அங்கஜன் இராமநாதன் சவால் விடுத்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அங்கஜன் இராமநாதன் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்பில் அங்கஜன் இராமநாதன் மேலும் தெரிவிக்கையில்,

”தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடக சந்திப்பொன்றில் அங்கஜன் இராமநாதன் கோட்டாபாயவின் ஏஜென்ட் என்றும் அவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்தினை தெரிவித்தார்.

அது மட்டும் அல்லாது அந்தக் கட்சியின்பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ் அங்கஜன் இராமநாதனின் தேர்தல் பிரச்சாரப் பணிக்காக ராணுவத்தினரும் பாதுகாப்புத் தரப்பினரும் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

இந்தக் கருத்தை நான் முற்றாக மறுக்கின்றேன்.எனது தேர்தல் பிரச்சாரப் பணிக்காக பாதுகாப்பு தரப்பில் ஒருவரேனும் பயன்படுத்தப்பட்டால் அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.அவ்வாறு அவர்கள் ஆதாரத்துடன் நிரூபித்தால் நான் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இருந்து முழுமையாக விலகுகின்றேன்.

இதே போன்று எனது பிரச்சாரப் பணிகளுக்காக பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபடுத்தப் பட்டனர் என்பதை அவர்களால் நிரூபிக்க முடியாவிட்டால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இந்தத் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வார்களா?என்பதையும் அவர்கள் பகிரங்கமாக தெரிவித்து கொள்ள வேண்டும்.

நான் அபிவிருத்திகளையும் அரசியல் தீர்விணையும் முன்னெடுப்பதற்காகவே தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related Posts