தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவுகாலம் நெருங்கிவிட்டதாக முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி வாழைச்சேனை பிரதேச சபைக்காக நேற்று (புதன்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்திருந்தது.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் போகுமிடமெல்லாம் தமிழ் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளர்களை நியமிப்பதிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பலத்த சவால்களை எதிர்கொண்டுள்ளது. இவர்களால் தமிழ் மக்களை ஒன்றுபடுத்த முடியவில்லை. தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வையும் ஏற்படுத்த முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 உள்ளூராட்சி மன்றங்களில் தாம் சுயேட்சையாக போட்டியிடுவதாகவும் தேர்தலில் தமது வெற்றி நிச்சயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.