தமிழ்த் தேசிய அரசியலில் 50 இற்கு 50 என்ற பெண் சமத்துவம் பேணப்படவேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

எமது தேசியப் போராட்டம் பெண் சமத்துவத்திற்காக பெரும் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பி செயற்பட்டுவந்திருந்தது. அதே வழியில் தமிழ்த் தேசிய அரசியலிலும் 50 இற்கு 50 என்ற விகிதத்தில் பெண் சமத்துவம் பேணப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்களில் 70 வீதமானோர் பெண்களாக இருக்கும் சூழ்நிலையில் வீரம் செறிந்த இந்த மண்ணில் பெண்களின் பங்குபற்றுதல் அதிகளவில் இடம்பெறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினை உள்ளடக்கிய தமிழ் தேசிய பேரவையின் உள்ளூராட்சி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இன்று (17.01.2018) புதன்கிழமை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,
“இந்த மண்ணிலே விடுதலைப் போராட்டத்தினூடாக பெண்களின் பங்களிப்பு கட்டியெழுப்பப்பட்டு வந்திருந்தது. போர்ச்சூழலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பினால் அது குறைவடைந்து பூச்சிய நிலைக்குச் செல்லும் அபாயகர நிலை காணப்படுகின்றது.
இந்த நிலையை நாங்கள் மாற்றி அமைக்க வேண்டும். இதற்கான சிறந்த ஒரு சிறந்த சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் 25 சதவீதம் பெண்கள் பிரதிநித்துவம் இருக்க வேண்டும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சதவீதம் எங்களை பொறுத்தவரையில் குறைவாக காணப்படுகின்ற போதிலும் இதனை ஒரு ஆரம்பமாக கொள்ள முடியும்.
நாங்கள் எமது கட்சி சார்பில் பெண் வேட்பாளர்களை அவர்களுடைய தலைமைத்துவத்தின் அடிப்படையிலேயே இணைத்து கொண்டோம். அவர்களுடைய தகுதியாக அதனை மாத்திரமே நாங்கள் கருத்திற் கொண்டோம். பெண் வேட்பாளர்கள் சுயமாக செயற்பட முடியாத நிலை போன்ற பல சமூக மட்ட பிரச்சனைகள் பேசப்படாமல் உள்ளன. பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றினை வெளிப்படுத்த எமது கட்சி பூரண ஒத்துளைப்பு வழங்கும். இன்று போரால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்ற வகையில் பெண்களும் சிறுவர்களுமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களுடைய பிரச்சனைகள் சமூக மட்டத்தில் பேசப்படாமல் உள்ளன. ஆனால் அவை மிகவும் ஆழமான பிரச்சனைகள். அந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நாம் எந்தவிதமான தடைகளையும் ஏற்படுத்தப்போவதில்லை. உங்களுக்குத் தேவைப்படும் முக்கியத்துவம் அத்தனையும் கொடுக்கப்படும். உங்களுடைய செயற்பாடுகளுக்கு எவரும் தடையாக இருந்தால் அவர்கள் அகற்றப்படுவார்கள் என்ற வாக்குறுதியையும் எமது தலமைப்பீடம் உங்களுக்கு வழங்குகின்றது.
எம்முடைய தேசிய போராட்டம் பெண் சமத்துவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பியிருந்தது. எனினும் பின்னர் வந்த சூழ்நிலைகளால் தற்போது அவை வேறு விதமாக மாறிவிட்டன. பெண் சமத்துவம் என்பது ஒட்டுமொத்த சமூகம் சார்ந்தது. இந்த சமத்துவத்தின் ஊடாகவே எமது தமிழ் தேசமும் கட்டியெழுப்பட முடியும். ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் தமிழ் மக்களை பிரநிதித்துவம் செய்து கலந்து கொள்ளும் புலம்பெயர் தமிழர்களில் 70 வீதமானோர் பெண்களாகவே உள்ளார்கள்.
அவர்கள் தமிழ் மக்களுடைய பிரச்னையை சிறந்த முறையில் முன்வைக்கின்றனர். இதே போன்று கடந்த கால எமது விடுதலை போராட்டத்திலும் பெண்களுடைய பங்களிப்பு என்பது உச்சமாக தான் இருந்தது. தமிழ்த்தேசிய அரசியலில் பெண்களின் பங்களிப்பு 50 வீதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டால் தான் தமிழ்த்தேசிய அரசியல் வினைத்திறனாக இருக்கும். எமது அந்நிய நாடான இந்தியாவில் பெண்கள் முன்னின்று போராடுகின்றார்கள்.
ஆனால் எத்தனையோ சாதனைகளை புரிந்த எங்கள் மண்ணில் பெண்சமத்துவதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆகவே நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி தேர்தல்மூலம் பெண்சமத்துவம், சமூக மட்ட பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டும். இதற்கான தெரிவை மக்கள் மேற்கொள்ள வேண்டும்” – என்றார்.

Related Posts