தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக கிராமங்கள் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான வரைபை மக்களிடம் கையளித்து அவர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் முழுப்பங்களித்தல் உட்பட முக்கியமான மூன்று தீர்மானங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) மத்திய குழுக்கூட்டம் அந்த அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு முக்கிய தீர்மானங்கள் மூன்றும் நிறைவேற்றப்பட்டிருந்தன.
அவை வருமாறு –
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்துக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தியாகம் மகத்தானது. அதனை மத்திய குழு வெகுவாகப் பாராட்டுகின்றது.
2014ஆம் ஆண்டு ஜுலை மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்காக தமிழ்த் தேசிய சபை அமைக்கப்படவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட ஏனைய பங்காளிக்கட்சிகளின் தலைவர்களிடத்திலும் கையளிக்கப்பட்டபோதும் அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
இவ்வாறான நிலையிலேயே தனிப்பட்ட கட்சி அரசியலுக்கு அப்பால் மக்களை அணி திரட்டுவதற்காக சகல தரப்பினருடனும் இணைந்து செயற்படும் நோக்கில் தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவு வழங்கியதோடு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தீர்மானித்தமை வரவேற்கப்படவேண்டியதோடு இத்தீர்மானம் கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் பிரிந்து சென்றதாக அர்த்தப்படுத்த முடியாது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழ் மக்கள் பேரவையுடனும் இணைந்து செயற்படுவதற்கு மத்திய குழு அங்கீகாரமளிக்கிறது.
தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக கிராமங்கள் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் பங்கேற்பதுடன் அரசியல் தீர்வு தொடர்பான வரைபை மக்களிடம் கொடுத்து சகல மக்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ளுவதற்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குதல் ஆகிய மூன்று தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.