தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இன்று உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என தெரிவித்தே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில் பிரதிவாதிகளாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 157/7A(4) என்ற பிரிவின் கீழ் குறித்த விஞ்ஞாபனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளோ அமைப்புகளோ நாட்டை பிரிவினைக்குட்படுத்தும் விடயங்களை முன்வைக்கக் கூடாது. இதனடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சட்டத்தை மீறியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பல கட்சிகளைச் சேர்ந்த ஒரு கூட்டணிக் கட்சியாகும். அத்துடன், கூட்டமைப்பு அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியல்ல.
அக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயே போட்டியிடுகிறது. அரசியலமைப்பின் 157வது பிரிவின் படி தனிநாட்டுக்கான முனைப்புகளை மேற்கொள்வது சட்டவிரோதமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாகவோ மறைமுகமாகவோ தனிநாட்டுக்கான கோரிக்கையினையே முன்வைத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது