தமிழ்த் தேசியக் கட்சிகள் யாழில் திடீர் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளும் புதிதாக இணையவுள்ள கட்சிகளும் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபமொன்றில் நேற்று வியாழக்கிழமை (12) மாலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டன.

க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி என்பன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன.

யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணி, ஜனநாயக போராளிகள் கட்சி உள்ளிட்ட மேலும் சில தரப்புகள் ஒன்றாக போட்டியிட இணக்கம் கண்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆனாலும் கட்சிகளுக்கிடையே பொதுச் சின்னம் ஒன்றை கொண்டு வந்து உடன்பாட்டை ஏற்படுவதில் உள்ள தாமதம் காரணமாக கூட்டணி அறிவிப்பு தாமதமாகி வருகின்றன.

இந்நிலையில் நேற்றைய தினம் ஆசன பங்கீடுகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன்,வி.மணிவண்ணன், க.சர்வேஸ்வரன், குருசாமி சுரேந்திரன், விந்தன் கனகரட்ணம், சபா.குகதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன் உள்ளூராட்சிமன்றங்களின் தவிசாளர்கள், பிரதிநிதிகள் அடங்கிய 25 பேர் வரையானோர் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

நேற்றைய கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாதநிலையில் கட்சித்தலைவர்கள் மற்றும் உயர்மட்டத் தலைவர்கள் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி கலந்துரையாடி இறுதி முடிவை எட்டுவதுடன் சனிக்கிழமை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts