தமிழ் மக்களின் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டிகள், முரண்பாடுகள் காரணமாக, ஒட்டுமொத்த தமிழினமும் அழிவுப் பாதையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதென, வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பொதுநூலகக் கேட்போர்கூடத்தில், நேற்று (12) காலை இடம்பெற்ற, தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐந்து கட்சிகளாக இணைந்து, தன்னை முதலமைச்சர் பதவிக்குச் சிபாரிசு செய்தமையைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் சி.வி, அதனால் கட்சி ரீதியாக முரண்பட முன்வரவில்லை எனவும் அதற்கு இசையவில்லை எனவும் தெரிவித்ததோடு, தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகளே, தனக்கு முக்கியமானதாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.
“பல வித பாரதூரமான பிரச்சினைகளை, தமிழ் மக்கள் எதிர் நோக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். அரசாங்கமும், சிங்கள மக்கள் தலைவர்களும், முஸ்லிம் மக்கள் தலைவர்களும், எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்றெல்லாம் திடமான கொள்கைளை வகுத்து, அவற்றின் அடிப்படையில் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், தமிழ் மக்களின் தலைவர்கள், உட்பூசல்களுக்கு இடங்கொடுத்து, தன்னல சிந்தனைகளுக்கு இடங்கொடுத்து, தம்முள் போட்டி மனப்பான்மையுடன் நடக்கவே எத்தனித்துள்ளார்கள். இது, ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தையும் அழிவுப் பாதையில் செல்ல வழிவகுக்கும் என்பது எமது கருத்து.
“பொதுநலன் கருதி, எமது சுயநலங்களையும் முரண்பாடுகளையும் ஒதுக்கி வைக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். இவ்வாறான ஒரு முரண்நிலையை, ஆயுதங்கள் ஏந்தியவர்கள் காலத்தில், ஆயுதங்களே தடுத்து நிறுத்தின. இன்று ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில், நாங்கள் ஒவ்வொருவருமே எம்முடைய கடமை யாது என்று ஆய்ந்து அறிந்து, உணர்ந்து செயற்பட வேண்டிய நிலையில் உள்ளோம்” என்று தெரிவித்தார்.
இலங்கையில் தற்போதைய கால அரசியல் தொடர்பாகக் கவனஞ்செலுத்திய முதலமைச்சர் சி.வி, ஆரம்பத்தில் இருந்தே, தமிழ் மக்கள், சுயநிர்ணய உரித்தைப் பெற்றிருந்தவர்கள் என்ற உண்மையை, பெரும்பான்மையின மக்கள் தலைவர் தட்டிக்கழிக்கப் பார்க்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டியதோடு,“ அதிகாரப் பரவலாக்கம் என்பது, பல்லினங்களின் ஒப்புதலோடு நடைபெற வேண்டுமே ஒழிய, பெரும்பான்மையினரிடமிருந்து எமக்குத் தரப்படும், அவர்களின் கொடைச் சிந்தனையின் வெளிப்பாடாக இருக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.
தமிழர் தரப்பு வேண்டிநிற்கும் கோரிக்கைகளுக்குக் குறைவான வகையில், அரசாங்கத்தால் அதிகாரப் பரவலாக்கம் இடம்பெறுமாயின், அவற்றை எதிர்க்கவும் கூடாது, ஏற்கவும் கூடாது எனத் தெரிவித்த அவர், ஆளுநர் அதிகாரங்களை, அதற்கான உதாரணமாகக் குறிப்பிட்டார்.
ஆளுநரின் அதிகாரங்களைக் கத்திரிக்க, அரசாங்கம் முன்வருமாயின், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை எனவும், ஆனால், ஆளுநர் பதவி, வெறுமனே சம்பிரதாயத்துக்கு உரியது என்ற தமது கோரிக்கையில் மாற்றமிருக்காது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “பெரும்பான்மையினர் தர முன்வரும் அரசியல் சலுகைகள், எம்மிடமிருந்து அவர்கள் ஏற்கெனவே பறித்துக் கொண்டவையே தவிர, அவர்களுக்குரிய உரித்துகள் அல்ல. இந்த அடிப்படையிலேயே நாம், அரசாங்கம் தர இருக்கும் எந்த அரசியல் சலுகையையும் எதிர்நோக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
அரசாங்கம் தரும் தீர்வை, முழுமையான தீர்வு அல்லது முற்றுமுழுதான தீர்வு என, தமிழ் அரசியல் தலைவர்கள் ஏற்றுக் கொண்டால், “நீங்கள் ஏற்றுக் கொண்டதைத் தான் நாம் ஏற்கனவே தந்துவிட்டோமே? பின் எதற்காக மேலும் உரித்துகளையும் உரிமைகளையும் கோருகின்றீர்கள் என்று எம்மிடம் கேட்பார்கள்” என்று குறிப்பிட்ட அவர், அடிப்படைக் கோரிக்கைகளில் இருந்து எப்போதும் மாறப்போவதில்லை என்பதை, அரசாங்கத்துக்குத் தெளிவாக எடுத்துக்கூற வேண்டிய கடப்பாடு உண்டு எனவும் தெரிவித்தார்.