சிறீலங்காவில் தனியரசொன்றை உருவாக்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை தமிழரசுக் கட்சியும் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவாளர் அனுர லக்சிறியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணையை தொடருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாண சபையின் செயலாளர் பத்திநாதன் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண சபையில் கடந்த 7ஆம் திகதி முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட பிரேரணையில் வடக்குக் கிழக்கு இணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு தனியான அரசாங்கம் ஒன்று அமைக்கப்படவேண்டும் எனக் கோரியிருந்தார்.
அத்துடன், கடந்த 22ஆம் திகதி வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு தேவையென வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து தனியரசொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அரசியலமைப்பை மீறிச் செயற்படும் இவர்களை உச்சநீதிமன்றத்துக் அழைத்து விசாரணை செய்யவேண்டுமெனவும் மனுதாரர் உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன், வடமாகாணசபையின் தீர்மானத்தின் சிங்களமொழிப் பிரதியை சமர்ப்பிக்கும்படியும் உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.