தமிழ்தேசிய கூட்டமைப்பு எங்களுக்கு உதவும் என நம்பியே வாக்களித்தோம். ஆனால் அவர்களால் எங்கள் வாழ்க்கையில் மாற்றம் எதுவும் நடக்கவில்லை. கூட்டமைப்பு உண்மையாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமலாக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை அறிய நடவடிக்கை எதனையுமே இதுவரையில் எடுக்கவில்லை. எடுக்கவும் மாட்டார்கள். 3 தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கண்ணீர் மல்க கூறியிருக்கின்றார்கள்.
மதியரசன், சுலக்ஷன், தர்ஷன் என்னும் 3 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை தொடர்ந்தும் வவுனியா நீதிமன்றத்திலேயே நடத்துங்கள் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. இது தொடர்பாக மேற்படி அரசியல் கைதிகளுடைய உறவினர்கள் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கண்ணீர்மல்க கூறியுள்ளார்கள்.
இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில்,
எங்களுடைய உறவினர்களின் வழக்குகள் அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றப்படாமல் வவுனியா நீதிமன்றில் தொடர்ந்தும் நடத்துமாறு தீர்ப்பு வந்துள்ளது. சிறைகளில் உள்ள எங்கள் உறவுகளைபோல் எத்தனை பேர் சிறைகளில் மரண வேதனையை அனுபவித்திருப்பார்கள். இப்போதும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய உறவினர்கள் வெளியே எங்களைபோல் கண்ணீருடன் இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களை இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் நினைத்து பார்கிறோம்.
தமிழ்தேசிய கூட்டமைப்பினை நாங்கள் நம்பியே வாக்களித்தோம். இருந்தும் இன்றளவும் நாங்கள் கண்ணீருடனேயே வாழ்கிறோம். 2009ம் ஆண்டு யுத்தம் நிறை வடைந்த பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காக உண்மையாக நடவடிக்கை எடுத்திருந்தால் சகல தமிழ் அரசியல் கைதிகளும் இன்று அவர்களுடைய குடும்பங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
ஆனால் அவர்கள் அவ்வாறான நடவடிக்கை எடுக்கவில்லை. இனிமேல் எடுக்கப்போவதுமில்லை. 3 தமிழ் அரசியல் கைதிகளின் துன்பத்தை சாதாரணமான கணேஸ் வேலாயுதம், எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.சதீஷ் ஆகியோ ரால் மாற்ற முடியும் என்றால் இத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பி னர்கள் இருந்து என்ன பயன்? அரசியல் கைதிகளின் உறவுகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்றுவரை கண்ணீருடன் வாழாவெட்டியாக இருக்கிறோம். உங்களை நம்பி வாக்களித்துவிட்டு கண்ணீருடன் வீதியில் நிற்கிறோம் என கண்ணீர்மல்க மேலும் கூறினர்.