தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – விஜயகாந்த்

vijayakanth‘தமிழர்களுடைய அரசியல் பிரச்சனைகளை தீர்க்க தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போராடவேண்டும்’ என முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் தலைமை அலுவலகம் வியாழக்கிழமை (28) மாலை யாழ். 3 ஆம் குறுக்கு வீதியில் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவினைத் தொடர்ந்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இந்த அலுவலகத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்த போது, கடந்த மூன்று நாட்களாக பல்வேறு தடைகளும் தொலைபேசி மூலமான அச்சுறுத்தல்களும் எமக்கு விடப்பட்டன.

நாம் அந்த தடைகளை மீறி கட்சியின் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தோம்.

எமது கட்சியானது எப்போதுமே ‘தமிழர்களுடைய தாகம் தமிழீழ தாயகம்’ என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி அந்த இலட்சியப் பாதையில் சென்றடையக்கூடிய எல்லா விதமான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றது. எங்களுடைய தாயகத்தை நாங்கள் மீட்க வேண்டும்.

அது மட்டுமல்லாது தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு பிரதேசத்தினை மீண்டும் இணைப்பதற்கு எமது கட்சி தொடர்ந்து போராடும்.

அது மட்டுமல்லாது இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பையும் அந்த ஆக்கிரமிப்புக்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றி தமிழர் தாயக பிரதேசத்தினை விடுதலை செய்து தமிழ்மக்களை அக் காணிகளில் குடியேற்றி நாம் இழந்த காணிகளை மீள பெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளிலும் எமது கட்சி ஈடுபடும்.

முற்போக்கு தமிழ் தேசிய கட்சியானது தமிழர்களுடைய பாரம்பரிய சொத்துக்கள், கலை என்பவற்றை பாதுகாக்க ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளோடு இணைந்து தமிழ் மக்களுக்காக போராடுவதற்கு எவ்விதத்திலும் நாங்கள் பின் நிற்கமாட்டோம்.

அதேவேளை அழிந்துபோன எமது கல்வி, கலை பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்க தொடர்ந்து போராடவும் அத்துடன் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவவும், புலம்பெயர்ந்துள்ளவர்களுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts