தமிழீழ வங்கிகளில் நகைகளை அடகு வைத்தோர் ஆதாரங்களுடன் விண்ணப்பிக்குமாறு இராணுவம் வேண்டுகோள்

புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட வடபகுதி மக்களின் நகைகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 2377 சட்டபூர்வ உரிமையாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதோடு புலிகளின் வங்கிகளிலும் அடகு நிலையங்களிலும் தமது நகைகளை அடகு வைத்த ஏனைய மக்களும் உரிய ஆதாரங்ளுடன் விண்ணப்பிக்குமாறு பாதுகாப்பு படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வட பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சம்பிரதாயபூர்வமாக 25 உரிமையாளர்களுக்கு அவர்களது தங்க நகைகளை கிளிநொச்சியில் வைத்து கையளித்தார்.

புலிகள் இயக்கத்தினால் நிர்வகிக்கப்பட்ட தமிழீழ வங்கி மற்றும் ஈழ அடகு நிலையங்கள் என்பவற்றில் யுத்த காலத்தில் வடபகுதி மக்கள் தமது தங்க நகைகளை அடகு வைத்திருந்தனர்.

மனிதாபிமான நடவடிக்கையின் பின்னர் தமிழ் மக்களின் இந்த பெறுமதி வாய்ந்த தங்க நகைகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.

அவை அடகு வைக்கப்பட்ட ஆவணங்களுடன் அட்டவணைப்படுத்தப்பட்டு பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மனிதாபிமான நடவடிக்கை முடிவடைந்த பின் குறித்த தங்க நகைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக சரியான உரிமையாளர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி புலிகளின் வங்கிகளில் அடகு வைத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை முன்வைத்த 2377 உரிமையாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எஞ்சிய தங்க நகைகளை உரிய உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புலிகளின் வங்கிகள் மற்றும் அடகு நிலையங்களில் தமது நகைகளை அடகு வைப்பதற்காக பயன்படுத்திய ஆவணங்கள் அல்லது வேறு ஆவணங்கள் என்பவற்றுடன் வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் யாழ்ப்பாண சிவில் இணைப்பு அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.

சரியான உரிமையாளர்களால் அடையாளம் காண முடியாத தங்க நகைகள் யாவும் அரச சட்ட ஒழுங்குகளுக்கு அமைய மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மீட்கப்பட்ட தங்க நகைகள் தொடர்பாக புலிகள் சார்பான அமைப்புகள் மற்றும் மேற்குலக ஆதரவு குழுக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts