தமிழில் நடிப்பாரா அமிதாப் பச்சன்?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழ்நாட்டின் நண்பர். சென்னையில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். படபிடிப்பில் பங்கேற்றிருக்கிறார். அந்தக் காலத்தில் சிவாஜி, இந்தக் காலத்தில் ரஜினி அவரது நண்பர்களாக இருக்கிறார்கள். அவர் சென்னை வரும்போதெல்லாம் பத்திரிகையாளர்களை சந்தித்தால் “தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது” என்பார். ஆனால் இதுவரை அது நடக்கவில்லை.

இப்போது முதன் முறையாக அமிதாப் பச்சன் தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா நடித்த கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் மீண்டும் படம் இயக்குகிறார். படத்திற்கு உயர்ந்த மனிதன் என்று தலைப்பு வைத்திருக்கிறார். இது சிவாஜி நடிப்பில் ஏவிஎம் தயாரித்த படத்தின் தலைப்பு என்பதால் ஏவிஎம் நிறுவனத்திடம் அனுமதி கேட்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் மீண்டும் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகள். தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. படத்தின் ஹீரோ எஸ்.ஜே.சூர்யா என்றாலும் உண்மையில் உயர்ந்த மனிதன் அமிதாப் பச்சன்தான். அவரை சுற்றித்தான் கதை நடக்கிறதாம். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஸ்கிரிப்டை மொழி பெயர்த்து அமிதாப்பச்சனுக்கு அனுப்பி உள்ளனர். படித்து விட்டு தனது கருத்தை சொல்வதாக அமிதாப் கூறியிருப்பதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 100 சதவிகிதம் பாசிட்டிவான பதில் அவரிடமிருந்து வரும் என்று தயாரிப்பு தரப்பு நம்பிக் கொண்டிருக்கிறது. இயக்குனரும் அதற்கான முயற்ச்சியில் தீவிரமாக இருக்கிறார்.

Related Posts