“போரில் உயிர்ப்பலியானோருக்கு மட்டுமல்ல, தமிழின விடுதலைக்கு உயிர்கொடுத்த அனைவருக்குமாக இன்று மே 18இல் ஒன்றுகூடி பிரார்த்திக்க வேண்டும். அதற்கு வன்னி மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பொருத்தமான இடமாகும் என எண்ணுகின்றோம். எனவே, மே 18இல் அனைவரும் எமது விடுதலை என்ற இலக்கை அடைவதற்கும், இழந்த உயிர்களின் ஆத்ம சாந்திக்காகவும், ஆன்ம ஈடேற்றத்துக்கும் ஒன்றுபட்டு தம் திடசங்கற்பத்தை வெளிப்படுத்துவதே உத்தமமானது என அழைக்கின்றோம்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
“இலங்கை நாட்டில் தமிழினப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படாததால் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்றுவரும் போராட்டங்கள் ஜனநாயக வழிகளிலும் ஆயுத வழியிலும் நடைபெற்று வந்துள்ளன. அதன் உச்சக்கட்டமாகவே 2009 மே 19 வரை இடம்பெற்றுவந்த ஆயுதப் போர் மிகப் பெரிய மனிதகுல அழிவில் தமிழினப் பேரழிவில் முடிந்தது. ஆனாலும் தமிழினப் போராட்டம் முடிந்துவிடவில்லை என்பதைக் கூறியாக வேண்டும்.
1956இல் தொடங்கிய மொழிப் போராட்டம், இன விடுதலைப் போராட்டங்கள் அதன் பின் 1958 இலிருந்து இனக்கலவரங்கள், தனிமனிதக் கொலைகள், இனப்படுகொலைகள் ஆயுதப் போரின் பின்னரான இனப்பேரழிவு இலட்சக்கணக்காக மனித உயிர்களைப் பலிகொண்டுள்ள வரலாறானது, ஒன்றிலிருந்து ஒன்று பிரித்துப் பார்க்கமுடியாததாகும். அவ்வாறு இழந்த உயிர்களுக்காக ஒட்டுமொத்தமாக ஒரு வரலாற்றைப் பிரதிபலிப்பதன் இலக்காகவும், அடையாளமாகவும் துயர் பகிர்வதுதான் மனித நாகரிகமாகும்.
இப்பேரழிவானது மொழி, மதம், சமூகம் கடந்த ஒரு வரலாற்றுப் பாடமாகும். இந்த வரலாறும் பேரழிவுகளும் தொடரமுடியாது. இந்த வரலாற்றுக் களங்கத்தை இந்த நாடும், சர்வதேசமும் இன்று சுமந்து நிற்கின்றன.
அதற்காக இந்த வரலாற்றுக் களங்கம், இன அழிவு, அதற்கான காரணங்களும் விளைவுகளும், உண்மைகளும் கண்டறியப்பட்டு மீண்டும் அவை தொடராமல், நிகழாமல் அதற்கு விடை காணப்படுதல் வேண்டும். அதுதான் மக்களின் தேசிய இனங்களின் மனித உரிமைகள், இறைமை, சுயநிர்ணய உரிமை தத்துவம் ஏற்கப்பட்டு அரசியல், சமூக, பொருளாதார விடுதலையை அனுபவிப்பதற்கான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதாகும்.
இத்தனை பேரழிவுகளுக்கு முன்னரும், பின்னரும் எம் மக்கள் தங்களுக்குரித்தான ஜனநாயக உருத்தை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் திடசங்கற்பமாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். சர்வதேசம் வரைக்கும் அதற்கான குரல்கள் ஒலிக்கின்றன. இந்த அரிய சந்தர்ப்பத்தை நாம் இழந்துவிடக்கூடாது.
அந்த திடசங்கற்பத்தை இறுகப் பற்றிநின்று எம்மின விடுதலையையும், நாட்டில் மக்களிடத்தில் சமாதானத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டும். அதுவே உண்மையான நல்லிணக்கமும் சமாதானமுமாகும். இவை தொடர்பில் போர்க்குற்ற விசாரணைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
போர்க்குற்றம் நிகழ்ந்து வந்ததற்கான காரணங்களும் அதன் உண்மைகளும் கண்டறியப்பட வேண்டும் என்பதும், அந்த உண்மைகளின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு இடம்பெற வேண்டும், பொறுப்புக் கூறும் கடப்பாடு நிலைநாட்டப்பட வேண்டும் என்பதும் இத்தனை இலட்சம் மக்களின் அர்ப்பணிப்புக்கும், தியாகத்துக்கும் கிடைக்கும் பயனாக இருக்கவேண்டும்.
எனவே, மே 18இல் எம் மக்கள் விடுதலை என்ற இலக்கை ஈட்டுவதற்காகவும், மத நம்பிக்கை கொண்ட மக்கள் ஆத்ம சாந்திக்காகவும், ஆன்ம ஈடேற்றத்துக்காகவும் தத்தம் வழியில் ஈமக்கடனை செய்ய வேண்டியவர்களாயும் உள்ளனர். அனைவரும் இந்த நாளில் தம்மிடங்களில் அமைதியான முறையில் பிரார்த்தனைகளில் ஈடுபடலாம். கண்ணீர் விட்டழுது ஆறுதல் பெறலாம். இந்தச் செயல் எமக்கு உரித்தானது. இதனை மறுப்பதுக்கு இடமில்லை.
இவற்றுக்கு மேலாக நாம் எந்தப் பேதமுமின்றி ஒற்றுமையாக ஒரு பொது இடத்தில் நினைவுத்தூபியை நிறுவி என்றும் மாண்புடன் நினைவுகூர வேண்டும்.
மே 18இல் ஒன்றுகூடி பிரார்த்திக்க வேண்டும். அதற்கு வன்னி மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பொருத்தமான இடமாகும் என எண்ணுகின்றோம்.எனவே, மே 18இல் அனைவரும் எமது விடுதலை என்ற இலக்கை அடைவதற்கும், இழந்த உயிர்களின் ஆத்ம சாந்திக்காகவும், ஆன்ம ஈடேற்றத்துக்கும் ஒன்றுபட்டுத் தம் திடசங்கற்பத்தை வெளிப்படுத்துவதே உத்தமமானது என அழைக்கின்றோம்” – என்று மாவை சோ.சேனாதிராஜா எம்.பி. மேலும் கூறியுள்ளார்.