தமிழினியின் நூல் சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியீடு!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அணித்தலைவி தமிழினி எழுதியதாகக் கூறப்படும் “ஒரு கூர் வாளின் நிழலில்” நூல் சிங்களத்திலும் அவசர அவசரமாக வெளியிடப்படுகிறது.

tamilini-book-1

சாமிநாதன் விமல் மொழிபெயர்த்திருக்கும் இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வை “தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு” ஒழுங்கு செய்திருப்பதாகத் தெரியவருகிறது.

மேலும் இந்த நூலை சிங்களத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகளில் தமிழினியின் கணவர் மேற்கொண்டிருப்பதாக சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் தமிழில் காலச்சுவடு வெளியிட்ட நூலில் “தமிழினி” என்று மட்டுமே முகப்பில் இருந்தது. ஆனால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூலின் முகப்பில் “தமிழினி ஜெயகுமாரன்” என்று இருக்கிறது.

ஏற்கனவே தமிழினியின் “கணவர்” குறித்த சர்ச்சையான தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையின் இந்த வெளியீடு பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளன.

தமிழினி இறந்த பின்னர், அவர் எழுதியதாக கூறப்பட்டு வெளியிடப்பட்ட இந்த நூல் அவசர அவசரமாக சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமையும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தும் பல நூல்கள் வெளிவந்த போதும் அவை சிங்களத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நூலின் முகப்பு அட்டையில் தமிழினி சிங்களப் பெண் போல காட்சியளிக்கும் புகைப்படத்தையும் தேர்வு செய்துள்ளனர்.

தமிழினியின் மரணம், மற்றும் கூர்வாளின் நிழலின் மர்மம் என்பவை குறித்த சர்ச்சைகளை இந்த நூல் உறுதி செய்கிறது என்ற கருத்துக்கள் பலராலும் முன்வைக்கப்படுகிறது.

இந்த நூலின் பின்னட்டையில் தமிழினி எழுதியதாகக் கூறப்பட்டு பிரசுரிக்கப்பட்ட பகுதியை தமிழக எழுத்தாளர் பிரேமாரேவதி காலச்சுவடு இதழில் எழுதியதாகவும் அதனை இறந்த ஒருவரின் பெயரில் எவ்வாறுவெளியிடுவது என்றும் ஈழக் கவிஞர் தீபச்செல்வன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதேவேளை தமிழக எழுத்தாளர் பிரேமாரேவதி மற்றும் அப் புத்தகத்தை வெளியிட்ட காலச்சுவடு நிறுவனர் உள்ளிட்டோர் அது தவறாக நடத்து விட்டதாக வருத்தம் தெரிவித்தனர்.

இவ்வாறு பல சர்ச்சைகளுடன் உள்ள புத்தகத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் அவசரமும் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பிரபல சிங்கள இயக்குனரும், பிரமுகருமான தர்மசிறி பண்டாரநாயக்க வெளியிட்டிருப்பதாக தெரிகிறது.

மே மாதம் 13 வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணிக்கு இலங்கை மன்றக் கல்லூரியில் இதன் வெளியீடு நடத்தப்படுவதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

tamilini-book-2

Related Posts