தமிழினத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின் வெளிப்பாடே செம்மலை அத்துமீறல் – தமிழ் மக்கள் பேரவை

தமிழினத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின் வெளிப்பாடாகவே, நீதிமன்ற உத்தரவை பொலிஸார் துணையுடன் மீறி செம்மலையில் பௌத்த தேரரின் உடலை தகனம் செய்தமையென தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதாக தெரிவித்து அந்த பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸார், அந்த உத்தரவை மீறி அடாவடித்தனமாக நடந்துகொண்டவர்களுக்கு பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்துள்ளதுடன், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நியாயத்தை கேட்ட தமிழ் சட்டத்தரணிகள், ஆலய பூசகர் மற்றும் அப்பாவித் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை வேடிக்கைபார்த்து நின்றமையானது, தமிழர்கள் மீதான அடக்குமுறையின் உச்சமாகும். இத்தாக்குதல் சம்பவத்தினையும் அத்துமீறலையும் தமிழ் மக்கள் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அத்துமீறி அமைக்கப்பட்டிருக்கும் பௌத்த விகாரையில் தங்கியிருந்து புற்றுநோய் காரணமாக உயிரிழந்த கொலம்பகே மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்குவின் இறுதி கிரியைகளை ஆலய வளாகத்தில் நடத்தவோ அவரது உடலை தகனம் செய்யவோ, சமாதி கட்டவோ, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அங்கிருக்கும் இராணுவ முகாமிற்கு அருகேயுள்ள கடற்கரையில் உடலை தகனம் செய்யுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

அதையும் மீறி தமிழர்களின் மரபுரிமை பிரதேசமாகவும் வழிபாட்டிடமுமாக திகழ்ந்து வரும் நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணிக்கு அருகாமையில் பௌத்த தேரரின் உடலை தகனம் செய்துள்ளமை, இனவன்முறையை தூண்டும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகவே அமைந்துள்ளது.

மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் உயிரிழந்த தேரரின் உடலை முல்லைத்தீவுக்கு எடுத்துவந்து அதனை கருவியாகப் பயன்படுத்தியுள்ளமையானது திட்டமிட்ட நடவடிக்கையாகவே நாம் கருதுகின்றோம்.

உயிரிழந்த தேரர் வசித்துவந்த இடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அவர்களை தகனம் செய்வதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் தகனம் செய்வதே முறையாகும்.

இவ்வழமையை வேண்டுமென்றே தவிர்த்து தமிழர்களது மரபுரிமை பிரதேசமாக திகழ்ந்துவரும் ஆலய வளாகத்திலேயே நீதிமன்ற உத்தரவையும் மீறி அதுவும் சிங்களப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சிங்கள மக்களை வரவழைத்து கலகொட அத்தே ஞானசார தேரரே முன்னின்று மேற்கொண்டிருக்கும் இச்செயலானது தமிழர்களுக்கு எதிரான இன வன்முறையை தூண்டும் செயற்பாடேயாகும்.

பொறுப்புடன் செயற்படவேண்டிய பௌத்த துறவிகளும் சட்டம்-ஒழுங்கை பேணிப்பாதுகாக்க வேண்டிய பொலிஸாரும் தமிழர்களுக்கு எதிரான இச்செயற்பாட்டில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ளமையானது மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்கு இலங்கைத் தீவை கொண்டு செல்வதற்கான முன்னேற்பாடாகவே அமைந்துள்ளது.

அவ்வகையில் அனர்த்தம் ஏதும் ஏற்படுவதற்கு முன்னதாக இவ்விடயத்தில் உரிய நீதியை நிலைநாட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய கவனமெடுக்க வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொள்கின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts