ஜனாதிபதித் தேர்தலில் சகல மக்களும் பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேனவுக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். மாவட்டக்கிளை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செயலாளர் நாயகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கம் மாறியபோதும் எந்த அரசும் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காத நிலையில் இன்று பல்வேறு கொள்கைகளோடு செயற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து எல்லோரையும் பாதிக்கக்கூடிய பல்வேறு பிரச்சினைகளின் தீர்விற்கு ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்துவரும் வேளையில் –
01.ஏமக்கு சாதகமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமையால் அக்கட்சிகள் எடுக்கும் முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.
02.நாட்டின் இனப்பிரச்சனை உட்பட தீர்வு காணமுடியும் என்ற கௌரவமிக்க சில தலைவர்களின் கருத்தை நம்பிக்கையுடன் வரவேற்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு சிறுபான்மை இன மக்களுக்கும் உண்டு.
03.இவ்வரசியல் கட்சிகளின் தலைவர்கள் நியாயமான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளமையால் இக்கட்டத்தில் அவர்கள் முயற்சிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வகையில் எம்மைச் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை உட்புகுத்தாது தவிர்க்க வேண்டியது சிறுபான்மையின மக்களாகிய எமது கடமையாகும்.
04.இன்றைய சூழ்நிலையை அனுசரித்து வேறு கட்சியோ, கட்சி உறுப்பினர்களோ எங்களோடு இணைந்து செயற்பட விரும்பின் நாங்கள் இணைத்துக்கொள்ளத் தயாராக உள்ளோம்.
மொத்தத்தில் இவ்வழியில் ஜனாதிபதி வேட்பாளர் கொடுத்துள்ள உறுதிமொழியிலும் தன்நலன் கருதாது இப்பணியில் ஈடுபட்டுள்ள அரசியல் சார்பற்ற தலைவர்களின் உறுதி மொழியிலும் பல்வேறு கொள்கைகளில் இதுவரை ஈடுபட்டிருந்த 36 கட்சித்தலைவர்களின் உறுதி மொழியிலும் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.
எனவே மக்களின் இதுவரை தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு சகல இன, மத மக்களும் ஒற்றுமையாக புதிய ஜனநாயக அமைப்பில் வாழவைக்க எடுக்கப்படும் நடவடிக்கையாகிய ஜனாதிபதித் தேர்தலில் சகல மக்களும் பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேனவுக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். மாவட்டக்கிளை ஏகமனதாக தீர்மானிக்கின்றது.- என்றுள்ளது.