தமிழர் வரலாறுகளுக்கு தற்போது பாடப்புத்தகங்களில் மறைக்கப்பட்டு வருகின்றது. எனவே எதிர்வரும் சந்ததியினருக்கு எமது வரலாறுகள் அறிந்து கொள்வதற்கு தனிநூல் ஒன்றினை உருவாக்க வேண்டும் என உறுப்பினர் பரஞ்சோதியால் கொண்டுவரப்பட்ட பிரேரணை வடக்கு அவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
வடக்கு அவையின் 20 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போதே உறுப்பினர் குறித்த பிரேணையினை முன்வைத்தார்.
மேலும் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த பல வருடங்களாக தமிழர் வரலாறு சம்பந்தப்பட்ட பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டு வந்தன. எனினும் தற்போது எமது வரலாறுகள் பாடப்புத்தகங்களிலிருந்து அகற்றப்பட்டு முற்றுமுழுதாக நீக்கப்பட்டுள்ளது.
எமது எதிர்கால சந்ததியினருக்கு தங்களுடைய மூதாதையர்களின் வரலாறுகளை அறிந்து கொள்ள முடியாது போகின்றது. இவற்றைத் தடுப்பதற்கும் இலங்கையில் தமிழர் அரசுகள் இருக்கவில்லை என்பதை விளம்புவதற்குமே இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே தமிழர் வரலாறுகளை பாட புத்தகங்களில் சேர்க்க மத்திய கல்வி அமைச்சையும் வரலாற்று பாடநூற்சபையையும் இச்சபை கோருகின்றது. அத்துடன் தமிழர்களின் வரலாறு நிலைத்து நிற்கும் வகையில் மறைக்கப்பட்டு வரும் வரலாறுகளை உள்ளடக்கி வரலாற்று புலமை சார்ந்த ஒரு குழுவை ஏற்படுத்தி தனியான நூல் ஒன்றினையும் ஆக்கவேண்டும் என்றும் தனது பிரேரணையில் தெரிவித்திருந்தார்.
உறுப்பினர்களது ஏகோபித்த கருத்துக்களின் அடிப்படையில் குறித்த விடயம் தொடர்பில் விரைவில் ஆராய்வதாக அவையில் தெரிவிக்கப்பட்டதோடு பிரேரணையும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதேவேளை, வன இலாகா பிரிவினர் தமக்கென காணிகளை எல்லையிடும் போது அந்தந்தப்பகுதி கிராம அலுவலகர் மற்றும் பிரதேச செயலர் ஊடாக பொதுமக்களினும் கலந்துரையாடி அவர்களது காணிகளை இனங்கண்ட பின்னரே தமக்கான எல்லையினை இட வேண்டும் என மாகாண காணி ஆணையாளர் ஊடாக காணி ஆணையாளரை இச் சபை கோருகின்றது என்ற பிரேரணையினை உறுப்பினர் ரவிகரன் கொண்டுவந்தார் .
இதுகுறித்து உறுப்பினர் பசுபதிப்பிள்ளை மற்றும் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் ஆகியோர் ஆமோதித்து உரையாற்றினர். அதன்பின்னர் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும் சுன்னாகம் நிலத்தடி நீர் அனல் மின் நிலையத்தினால் வெளியேறும் கழிவு ஒயில் வெளியேற்றத்தால் பாதிக்கப்படுகின்றது எனவே விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலான பிரேரணை விவசாய அமைச்சரினால் கொண்டுவரப்பட்டு உறுப்பினர் கஜதீபனால் ஆமோதிக்கப்பட்டு அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நேற்றய தினம் 03 பிரேணைகள் மாத்திரமே எடுத்தக் கொள்ளப்பட்டன. எனினும் உறுப்பினர் சிலரின் பிரேரணைகள் எடுத்துக் கொள்ளப்படவிருந்தது . எனினும் நேரம் போதாமையால் முடிவுறாத விடயங்களுக்காக அவை எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்றைய அமர்வில் நேற்று எடுத்துக் கொள்ளப்படாத பிரேரணைகள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.