தமிழர் பிரச்சினை தொடர்பில் அரசுடன் இணைந்து பணியாற்ற தயார்: சீ.வி.விக்னேஸ்வரன் ! கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட அரசு தயார்: பசில்

தமிழர்களின் பிரச்சினை சம்பந்தமான விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவாகியுள்ள சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமோக வெற்றிக்கு பின் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய மாகாண சபை சில இடங்களில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வேண்டிய தேவையுள்ளது.நாம் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கின்றோம். இது அரசாங்கத்துடன் நாங்கள் இணைந்து கொள்ளபோகிறோம் என்று அர்த்தமல்ல.

மாகாணங்களுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உட்பட பல எதிர்கால பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடிய பின்னர் புதிய மாகாண சபை பதவியேற்கும்.இதேவேளை, தென் பகுதி மக்கள் தமிழ் மக்களுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பில் தென் பகுதி அரசியல்வாதிகள் அந்த மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.

கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட அரசு தயார்: பசில்

வடக்கில் வெற்றியீட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயலாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

இதேவேளை மக்களின் ஆணையைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் நாம் அதை வரவேற்போம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கிறார்

Related Posts