தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் நிலங்களை மீளக் கையளிக்கமுடியாது எனக் கூறுவதற்கு இராணுவத்தினருக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மக்களின் சொந்த நிலங்களை விடுவித்து அவர்களை அவர்களது காணிகளில் குடியமர்த்த மறுக்குமானால் நாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிடுவதுடன், மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் தயராகவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ். காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி 25ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து விடுதலைசெய்யப்பட்டபின்னர் அதன் திறப்புவிழாவில் கலந்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், நடேஸ்வராக் கல்லூரியைப்போல் இன்னமும் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் உட்பட இன்னும் பல இடங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றன. அவையும் விரைவில் விடுவிக்கப்படவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.