Ad Widget

தமிழர் தாயகமெங்கும் கருக்கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு தாயகம் தழுவிய மக்கள் போராட்டமாக பரிணமிக்கவேண்டும் : தமிழ் மக்கள் பேரவை

பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்படவர்களின் உறவுகளும் , இராணுவ ஆக்கிரமிப்பால் தமது காணிகளை இழந்த மக்களும்,தமது கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகவும் தமது கோரிக்கைகளை வெளியுலகுக்கு வெளிபடுத்தவும் , வடக்கு கிழக்கெங்கும் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

மக்கள் அணிதிரள்வுப்போராட்டங்கள் , எமக்கான நீதிக்கான ஒரு காத்திரமான செயன்முறை , என்பதில் தமிழ் மக்கள் பேரவை ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளதுடன் அதனை வலியுறுத்தியும் வந்துள்ளது.
காலாகாலமாக , வாழ்வின் அடிப்படை உரிமைகளுக்காக போராடிவரும் இந்த மக்களின் கோரிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் தமிழ் மக்கள் பேரவை தனது பூரண ஆதரவை வழங்குகிறது.

அத்தோடு இந்த மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு அனைத்து மக்கள் அமைப்புகளும் ஆதரவு தெரிவிக்கவேண்டும் எனவும் தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுக்கிறது.

தொடர்ச்சியாக ,பல தரப்புகளாலும் ஏமாற்றத்தை சந்தித்து வந்த மக்கள் , தமக்கான குரலை தாமே எழுப்ப முன்வந்திருப்பதும், தமது கோரிக்கைளில் மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் இருந்து போராடுவதும், எம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமானதாகும்.

எனினும் இந்த மக்களின் தொடர்ச்சியான போராட்டமானது , தனியே இந்த மக்களுக்கானது மட்டுமல்ல. மாறாக அரச அடக்குமுறைகளால் அநீதிக்குட்படுத்தப்பட்ட எங்கள் அனைவரினதும் ஒட்டுமொத்த குறியீட்டுக் குரலாகவே நாம் இதனை கருத வேண்டும் . நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமே தொடர்ச்சியாக போராடுவது என்பது, எமக்கான சமூகப்பொறுப்புணர்வை கேள்வுக்குட்படுத்துகின்றது.

இம்மக்களின் போராட்டத்திற்கு அனைத்து மக்களும் தம்மாலான பங்களிப்பை வழங்கி, எம் மக்களின் நீதிக்கான குரல் மேலும் உறுதிப்படவும் சர்வதேசத்தின் காதுகளை எட்டவும் நாம் செயற்படவேண்டும்.
காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் உறவுகள், உடல், உள சமூக மற்றும் வாழ்வாதார ரீதியில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளும் அழுத்தங்களும் மிகக்கொடூரமானவை. இவர்களுக்கான பொறுப்புக்கூறல் கால தாமதமின்றி செய்யப்படவேண்டும்.தடுத்துவைக்கப்பட்டவர்களின் பட்டியலை உடனடியாக வெளியிடுதல் உட்பட இந்த மக்களின் கோரிக்கைகளை அனைத்தையும் தமிழ் மக்கள் பேரவை ஏற்றுக்கொண்டு , மீள வலியுறுத்துகின்றது.

அது போலவே, ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றான வாழ்விடத்தை வன்முறையினூடு ஆக்கிரமித்து வைத்திருந்து கொண்டு, நிலத்தின் உரிமையாளர்களை தொடர்ந்தும் வீதிகளில் விட்டிருக்கும் அநீதியும் நல்லாட்சி என கூறப்படும் இந்த அரசாங்கத்திலும் தொடர்கிறது.

இந்த நாட்டின் அனைத்து நிர்வாகங்களும் பொறுப்பான சிறிலங்கா அரச உயர்பீடமானது, ஆக்கிரமிக்கப்பட்ட‌ மக்கள் காணிகளை விடுவிப்பதற்கான பொறுப்பை தட்டிக்கழித்து, அதனை இராணுவத்தின் பொறுப்பாக காட்ட முயற்சித்திருப்பதும் , பாதிக்கப்பட்ட மக்களை , இராணுவத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த நிர்ப்பந்திப்பதும், எமது பிரச்சினையின் பரிமாணத்தை மேலும் தரமிறக்கியிருக்கிறது.

காணிவிடுவிப்பு குறித்து முடிவெடுக்கவேண்டிய அரசாங்கத்துக்குரிய நிறைவேற்றதிகாரத்தை இராணுவத்துக்கு வழங்கி, அதிலும் இனப்படுகொலை புரிந்தவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் இராணுவக்கட்டமைப்புக்கு ஒரு சிவில் நிர்வாக அங்கீகாரத்தை கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களை இராணுவத்தோடு கலந்து பேசி அவர்கள் தருவதை பெறுமாறு கூறியிருப்பது நீண்டகால நோக்கில் மிக அபாயகரமான திட்டத்தின் ஒரு பகுதியேயாகும்.சிவில் நிர்வாகத்தின் பிரிக்கமுடியாத ஒரு கட்டமைப்புத்தான் இராணுவம் என்பதனை இதன்மூலம் எம்மை ஏற்கவைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

இராணுவத்தை தமிழர் தாயகத்தின் பொதுக்காணிகளில் நிரந்தரமாக குடியமர்த்தும் செயலுக்கு சம்மதித்தாலே , வன்முறைமூலம் ஆக்கிரமிக்கப்பட்ட தமது சொந்த காணிகளை மீளப்பெறமுடியும் எனும் மிக கேவலமான பேரத்துக்கு தமிழ் மக்களை சிறிலங்கா அரசு தள்ளியுள்ளது.

காணி தொடர்பான மக்களின் உணர்வுகளை பேரத்துக்குள்ளாக்கி , தமிழர் தாயகத்தில் இராணுவத்தின் நிரந்தர இருப்பை உறுதி செய்ய , அதுவும் எமது மக்களின்மீள்குடியேற்றத்துக்கென ஒதுக்கப்பட்ட பணத்திலேயே , ஆக்கிரமிப்பு இராணுவத்தை குடியமர்த்துவதற்கான அடிப்படைவசதிகளை செய்வது என்பது அர்த்தமுள்ள இராணுவமயநீக்கல் எனும் கோரிக்கையை அர்த்தமற்றதாக்கிறது.

தனியார் காணிகளில் இருந்து விலகிய இராணுவம் தமிழர் தாயகத்தின் பொதுக்காணிகளில் நிரந்தமரமாக குடியமர்வது என்பது , எமது மக்களின் இயல்புவாழ்க்கையை தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்குள்ளேயே வைத்திருக்கும்.

எனவே,தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் அம்மக்களிடமேயே விரைவில் மீளளிக்கப்பட்டு ,இரானுவமயமாக்கல் நீக்கப்பட்டு , உண்மையான சிவில்வெளி வழங்கப்படவேண்டும் என தமிழ் மக்கள் பேரவை வலியுறுத்துகிறது.

காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளுக்காகவும் ஆக்க்கிரமிக்கப்பட்ட தம் நிலங்களுக்காகவும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை , அம்மக்களுக்கு இடைகால நிவாரணமாக வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவேண்டும் எனும் கோரிக்கையையும் நாம் சிறிலங்கா அரசிடமும் சர்வதேச நாடுகளிடமும் புலம்பெயர்ந்த எம் மக்களிடமும் முன்வைக்கிறோம்.

இப்போராடங்கள் அனைத்தும் தனித்தனி பிரச்சினைகளுக்கான பிரத்தியேக குரல்களாக கருதப்படமுடியாதவை.எம்மீதான அடக்குமுறைகளின் விளைவுகளுக்கெதிரான ஒட்டுமொத்தகுரலாகவே இவற்றை நாம் கருதவேண்டும்.

எனவே, தமிழர் தாயகமெங்கும் இந்தப்போராட்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு , ஒருமித்த குரலாக ஒலிப்பதுவே எம் கோரிக்கைகளின் வலுவை அதிகரித்து எமக்கு சாதகமான‌ விளைவுகளையும் விரைவுபடுத்தும்.
எனவே, இனிவரும் காலங்களில் இந்த மக்களின் போராட்டக்குரல்கள் வடக்கு கிழக்கு தழுவியதாக ஒருங்கிணைக்கப்பட்டு பலம்மிக்க ஒரு குரலாக பரிணமிக்க வேண்டும் என நாம் வேண்டுகிறோம்.

நன்றி
தமிழ் மக்கள் பேரவை
25/04/17

இவ்வாற தமிழ் மக்கள் பேரவையினால் அனுப்பி வைக்கப்படடுள்ள ஊடக அறிக்ைகயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts