பழைய ஆட்சியில் மக்களுக்கு நடந்த பல சம்பவங்கள் தற்போது இடம்பெறுவதில்லை, எனினும் அது எமது மக்களின் பிரச்சினைக்கு முடிவு அல்ல, எமது பிரச்சினைக்கு முடிவு வரவேண்டும் எமது மக்களுக்கு நிரந்தரமான, நியாமான தீர்வு வரவேண்டும், என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்து வௌியிடுகையில்,
பல்கலைகழகத்திற்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பதை நாம் பாராட்டுகின்றோம். ஒரு கருத்து இருக்கின்றது இன்றைக்கு தமிழ் மாணவர்கள் பின்தங்கிய நிலையில் இருக்கின்றார்கள் என்று ஒரு காலத்தில் பல்கலைகழகத்திற்கு செல்லுகின்ற மாணவர்களை பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.
இன்று அவ்வாறான நிலைமையில் பின்னடைவு எற்பட்டுள்ளது என்பது ஒரு உண்மை. ஆனால் அவ்வாறான நிலை நிரந்தரமாக இருக்ககூடிய பின்னணி இல்லை. சமூகத்தின் ஒத்துழைப்புடன் அது மாறலாம் அந்த நிலைமையினை மாறுவதற்கு எல்லோரும் முயற்சிக்க வேண்டும்.
இன்றைக்கு ஒரு ஆட்சி மாற்றம் எற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் ஒரு போதும் மாறமாட்டோம் தாங்களை எவராலும் மாற்றமுடியாது என்று செயற்பட்டு வந்தார்கள். ஆனால் அவற்றிக்கு இவ்வாறான ஆட்சி மாற்றம் பதில் கூறியிருக்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பொருத்தவரை தற்போதைய ஆட்சி மாற்றத்தினை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் அவ்வாறான ஆட்சி மாற்றத்தினால் தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.
அவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியிருக்கின்றது. அவை தீர்க்கப்படும் என்று அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.
தமிழ் மக்கள் ஒன்றாக இருக்க வேண்டியது அவசியம் அவ்வாறு ஒற்றுமையாக, ஒன்றாக இருந்தால் அது எங்களுக்கு பெரிய பலம் என்றும் அவர் தெரிவித்தார்.