தமிழர்கள் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கோரிக்கை!!

தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

tnpf-tamil-theseya-makkal-munnani

இது குறித்து அந்தக் கட்சி ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்புசார் இன அழிப்புக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆட்சி மாற்றம் என்ற போர்வையில் வெறும் ஆள்மாற்றம் மட்டுமே இடம்பெறப்போகின்றது.

மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்கள் மீது இன அழிப்பை மேற்கொண்டவர். தொடர்ந்தும் கட்டமைப்புசார் இன அழிப்பை மேற்கொண்டு வருபவர். மிகக் கொடூரமான ஆட்சியைத் தமிழ் மக்கள் மீது நடத்திக் கொண்டிருப்பவர். அவர் நிராகரிக்கப்படல் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

மைத்திரியை எடுத்துக் கொண்டால், அவருக்கு அருகில் இருப்பது ரணில் போன்று காட்டப்பட்டாலும் உண்மையில் அவருக்குப் பக்கபலமாக உள்ளவர்கள், இனவாத கட்சிகளான ஹெலஉறும, ஜேவிபி மற்றும் சந்திரிகா.

இந்த சந்திரிகா ஆட்சியில் நடந்தது என்ன – சமாதான தேவதையாக தன்னைக்காட்டி வெளிப்படையாகத் தமிழ் மக்களுக்கு சமஸ்டித் தீர்வு கொடுப்பேன் என்று கூறி 62 வீதமான வாக்குகள் பெற்று ஆட்சிப்பீடமேறியவர்.

பின்னர் சமாதானத்திற்கான யுத்தம் நடாத்தி 5 இலட்சம் மக்களை குடாநாட்டிலிருந்து பலவந்தமாக இடம்பெயர வைத்தவர். சத்ஜெய இராணுவ நடவடிக்கை, எடிபல இராணுவ நடவடிக்கை, ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை உள்ளிட்ட தீவிரமான போர் நடவடிக்கைகளை நடாத்தியவர்.

பல்லாயிரம் பேரை செம்மணியில் கொன்று புதைத்தவர். நவாலி தேவாலயம், மடு தேவாலயப் படுகொலைகள் உள்ளிட்ட தமிழர் தேசத்தில் பெருமளவு படுகொலைகளை அரங்கேற்றியவர். தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுத்த மாமனிதர் குமார் பொன்னம்பலத்தை கொலை செய்தவர்.

ரணிலுக்கும் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது புலிகள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வரைபை முன்வைத்தபோது ரணிலிடமிருந்த முக்கிய மூன்று அமைச்சுக்களைப் பறித்து சமாதான சூழலை குழப்பியவர்.

இந்த மைத்திரிபால அன்று வாகரையிலும் முள்ளிவாய்க்காலிலும் தமிழ் மக்கள் இலட்சம் இலட்சமாக கொல்லப்பட்டபோது மஹிந்த ராஜபக்ஷவுடன் கூடியிருந்து யுத்தத்தை நடாத்தியவர். சர்வதேச ரீதியில் போரையும் மஹிந்த ராஜபக்ஷவையும் நியாயப்படுத்தியவர்.

இன்று தெளிவாகக் கூறியிருக்கின்றார், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இராணுவத்தினருக்கும் எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இடமளியேன். சமஸ்டித்தீர்வு கொடேன் ஒற்றையாட்சியை பேணிப்பாதுகாப்பேன். பௌத்தத்திற்கு அரசியலமைப்பிலுள்ளவாறு முன்னுரிமை, என்று இனவாதக் கட்சிகளுடன் ஒப்பந்தமிட்டுள்ளார்.

எனவே மைத்திரியின் ஆட்சியிலும் போரக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வாய்ப்பில்லையெனில், தமிழர்கள் விடயத்தில் சட்டத்தின் ஆட்சி நல்லாட்சி என்ற பேச்சுக்கும் இடமில்லை.

இந்நிலையில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் எவருக்கேனும் தமிழ் மக்கள் தமது வாக்குகளை வழங்குவதானது எதிர்காலத்தில் அந்த வேட்பாளர் வெற்றி பெற்ற பின்னர் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்போகும் இன அழிப்பை தமிழர்களே சரி என்று ஏற்றுக் கொள்வதாகவே அமையும்.

இந்தத் தேர்தல் வெறுமனே இலங்கையில் குடும்ப ஆட்சியையும், ஜனாதிபதி ஆட்சி முறையையும் ஒழித்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான தேர்தல் போன்ற ஒன்றைத் தோற்றப்பாடு மட்டுமே காட்டப்படுகின்றது.

ஆனாலும் இந்தத் தேர்தலின் பின்னால் சர்வதேச வல்லாதிக்க சக்திகள் தமது நலன்களைப் பேணக்கூடிய ஒருவரை ஆட்சிக் கொண்டுவந்து விட வேண்டும் என்பதிலும் போட்டியிட்டுக் கொண்டுள்ளனர் என்பதனையும் எமது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக சீன சார்பு நாடுகள் ஓர் அணியாகவும், இந்திய மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ஓரணியாகவும் திரண்டுள்ளன. அந்த சக்திகள் தமது நலன் பேணும் தலைமையை ஆட்சியிலமர்த்தும் போட்டியில் நாம் வெறும் கருவிகளாக மட்டும் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

இந்நிலையில் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் தராதது மட்டுமல்ல நிச்சயமாகத் தீமையை உண்டு பண்ணாது என்ற உத்தரவாதம் கூட இல்லா நிலையில் நடைபெறப் போகும் இந்தத் தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்களைக் கோருகின்றது.

இதன் மூலம் தமிழ் மக்கள் தமிழ் தேசியவாத நிலைப்பாட்டை அதாவது சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான அரசியல் தீர்வுக் கோரிக்கையை கைவிடவில்லை, கைவிடப் போவதுமில்லை என்ற செய்தியையும், அது அடையப்படும் வரை அமைதியாக இருக்கப் போவதில்லை அதற்காக அவர்கள் அரசியல் ரீதியாகப் போராடிக் கொண்டேயிருப்பார்கள் என்ற செய்தியையும் சர்வதேச சமூகத்திற்குத் தெளிவாக உணர்த்த இதனை நல்லதொரு சந்தர்ப்பமாக தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் தமிழ் மக்களது அரசியல் பிரச்சினையை தீர்க்காது இந்தத் தீவில் ஓர் ஆட்சியை உண்டு பண்ணுவதும் தமது நலன்களை அடைந்து கொள்வதும் சாத்தியமில்லை என்பதனையும் சர்வதேச சமூகத்திற்கு நாம் தெளிவாக உணர்த்த வேண்டும்.

இதனைத் தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு தங்களது அரசியல் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு இந்தத் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கோருகின்றோம்.

Related Posts