தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலைத் தடுக்கமுனையும் இனவாதிகளின் முயற்சிகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் உப செயலாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான சண்.குகவரதன்.
தேர்தலில் பின்னடைவு கண்ட தமிழருக்கு எதிரான இனவாதிகள், நாட்டில் இரத்த ஆறு ஓடும் எனக் கடுமையான தொனியில் இனவாதத்தை விஷமாக வெளியிடுகின்றனர். இதற்கு எதிராக சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தனது அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே சண்.குகவரதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:-
தமிழர்களுக்கு எதிரான இனவாதிகளின் செயற்பாடுகளால் இலங்கை நாடு உலகின் மத்தியில் ஒதுக்கப்பட்ட காலம் இருந்தது தனிமைப்பட்டிருந்தது. வடமாகாண தமிழ் மக்கள் யுத்தத்தால் சொல்லொண்ணத் துயரங்களை அனுபவித்தனர்.
யுத்தத்திற்குப் பின்னரும் இனவாதிகளின் ஆட்சி அதிகாரத்தில் – நிழல் யுத்தத்தில் துன்பங்களை அனுபவித்தனர். வடமாகாணசபைத் தேர்தல் மட்டும் கடந்த ஆட்சியாளர்களால் நடத்தப்பட்டது. ஆனால், அதிகாரங்கள் பரவலாக்கப்படவில்லை. அந்த மக்களுக்கு ஜனநாயக சுதந்திரம், அரசியல் உரிமைகள் வழங்கப்படவில்லை. வெளிநாட்டவர்களுக்காக வட மாகாண சபை என்ற கண்துடைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இன்று பொதுத் தேர்தலில் இந்த இனவாதிகள் மக்களால் நிராகரிக்கப்பட்டு தோல்வி கண்டுள்ளனர். ஆனால், எப்படியாவது மீண்டும் அரசியல் குளிர் காண்பதற்கு தமிழ் மக்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்ற இனவாதப் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். இது பயங்கரமான பிரசாரமாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சிக்கான தேசிய அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உட்படப் பல நாடுகள் இலங்கைக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளன.
ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை மீண்டும் கிடைத்துள்ளது. வெளிநாட்டு நிதியுதவிகளும் கிடைக்க ஆரம்பித்துள்ளன. எனவே, இந்த நல்லாட்சியில் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை அரசு உண்மையாக முன்னெடுக்கவேண்டும்.
இல்லாவிட்டால் வெண்ணை திரண்டுவரும் வேளையில் பானை உடைந்த கதையாக சர்வதேச ஆதரவை இழந்து இலங்கை மீண்டும் தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகும். தமிழ் மக்கள் தனிநாடு கேட்கவில்லை, தன்மானத்துடன் வாழும் உரிமையையே கேட்கின்றனர். இதனை வழங்குவதில் எந்தத் தடையும் கிடையாது – என்றார்.