கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில், வெள்ளை வானில் தமிழர்கள் இருவர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கவிடம் விசாரணை மேற்கொள்ள, கொழும்பு நீதவான் நீதிமன்றம் மீண்டும் அனுமதியளித்தது.
இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் நேற்று( 18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மன்றில் ஆஜராகியிருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர், (சீ.ஐ.டி) அநுர சேனநாயக்கவிடம் விசாரணை மேற்கொள்ள ஏற்கெனவே அனுமதியளிக்கப்பட்ட போதும், விசாரணை நடத்தப்படாததால் மீண்டும் அனுமதிக்குமாறு கோரிநின்றனர். அக்கோரிக்கைக்கே அனுமதியளிக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில், பக்கரிசாமி லோகநாதன், இரத்தினசாமி பரமானந்தன் ஆகிய இருவரும், வானொன்றில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.
அந்தக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய வான், வெலிசறை கடற்படை முகாமுக்குப் பின் பகுதியில் இருந்தாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் தெரியவந்தது.
அத்துடன், கொழும்பு குற்றப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகராக இருந்த சுமுத சுதேஷ் விஜேசிங்க என்பவர், இந்தக் கடத்தல் தொடர்பில் இரகசிய விசாரணை நடத்தியதாகவும் அந்த அறிக்கையை, குற்றப்பிரிவின் அத்தியட்சகராக இருந்த அநுர சேனநாயக்கவிடம் கொடுத்தபோது, அதை வைத்திருக்குமாறு அவர் கூறியதாக, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று சீ.ஐ.டியினர், ஏற்கெனவே குறிப்பிட்டனர்.
அக்காலப்பகுதியில், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பிரிவின் அறிக்கையில் வேறுபாடுகள் உள்ளனவென்றும் தெரிவிக்கப்பட்டது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெலிசற முகாமின் அதிகாரியாக இருந்தவரும் தற்போது, கடற்படை லெப்டினன் கொமாண்டராக உள்ளவருமான தம்மிக அனில் மாபாவின் சட்டத்தரணியினால், அவருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு, தனி வாகனம் என்பன வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
தனி வாகனம் வழங்க முடியாது என்றும், பிரச்சினைக்குரிய சந்தேகநபர்கள் இருப்பின் அவர்களைத் தவிர்த்து விட்டு, சிறைச்சாலை வாகனத்தில் சந்தேகநபரைக் கொண்டுவருமாறு, சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதவான், அவரை, மே 2ஆம் திகதி திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.