சர்வதேச தலையீடுகளின் மூலமாக எமக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை நாம் கொண்டுள்ளோம். அதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. அதில் முஸ்லிம்களும் எம்முடன் ஒன்றிணைந்து பயணிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதை முஸ்லிம்கள் இழந்துவிடக் கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் செனட்டர் மசூர் மௌலானவின் நினைவுதின நிகழ்வு நேற்று கொழும்பு சுவடிகள் திணைக்களத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்-
முன்னாள் செனட்டர் மசூர் மௌலான முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்லாது தமிழ் மக்களினதும் தலைவராக செயற்பட்டவர். அவர் தன்னை அர்ப்பணித்து செயலாற்றிய தலைவர். அவர் ஆரம்பத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராகவும் செயற்பட்டவர். பல சந்தர்ப்பங்களில் தன்னை ஒரு தமிழரசுக் கட்சிக்காரன் என்று தெரிவித்துள்ளமை இன்றும் எனது மனதில் உள்ளது. தமிழரசுக் கட்சி சமஸ்டியை இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைத்த காலங்களில் நாம் இளையவர்களாக கட்சிக்காகவும் மக்களுக்காகவும் போராடிய காலகட்டத்தில் எம்முடன் இருந்து எமக்கு வழிகாட்டிய தலைமைகளில் மசூர் மௌலானவிற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.
தமிழரசுக் கட்சியின் வரலாற்று தீர்மானங்களில் முஸ்லிம் மக்களுக்கு அவர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதில், அவர்களையும் எம்முடன் அரவணைத்து அவர்களின் உரிமைகளை வலியுறுத்தி செல்லும் பயணத்தில் தந்தை செல்வா அன்றே உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார். அதேபோல் திருகோணமலை மாநாட்டிலும் முஸ்லிம் தலைவர்கள் பங்குபற்றி முஸ்லிம்களின் அரசியல் உரிமை தொடர்பில் தீர்க்கமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. அப்போது முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பிலான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேபோல் அரசியல் அலகுகள் தொடர்பில் பேசப்பட்டது. அதாவது அந்த மாநாட்டிற்கு முன்னர் தமிழ் பேசும் மக்கள் என்று பேசப்பட வார்த்தைகள் சற்று மாற்றப்பட்டு தமிழ் அரசும் முஸ்லிம் அரசும் என்று இரு வேறாக பாவிக்கப்பட்டதை நினைவுகூர விரும்புகின்றேன். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்ற ஆட்சியில் எங்களுக்கு என்ன நிகழ்ந்ததோ அதுவே முஸ்லிம்களுக்கும் மத ரீதியாகவும், இன ரீதியாகவும் அனுபவித்தார்கள். அது இன்னொரு வழியில் எம்முடன் இணைக்க உருவாக்கியுள்ளது. அந்த அனுபவங்களும் அந்த அத்தியாயங்களும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தேர்தலின் போது தமிழ் முஸ்லிம் மக்கள் ஒரே அடிப்படையில் சிந்திக்க நேர்ந்தது. எங்களின் விடுதலைக்காக எமது தமிழர்களின் உயிர் தியாகத்தின் பின்னர் இந்த நாட்டில் இனப்பிரச்சினையில் இருந்து விடுதலை பெறுமாயின் அந்த விடுதலையும் விடிவும் முஸ்லிம் மக்களையும் சென்றடையும் என்பதை உறுதியாக தெரிவிக்க விரும்புகின்றேன்.
கடந்த காலங்களில் எங்களிடையே துன்பங்களும் துயரங்களும் பிளவுகளும் ஏற்பட்டாலும் அவற்றை பொருட்படுத்தாது அவற்றை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு நாங்கள் எங்களின் சிந்தனைகளில் ஒன்றிணைந்து செல்வதை அடையாளம் காணவேண்டும். இந்த நாட்டின் போருக்கு பின்னரும் மஹிந்த அரசாங்கத்தின் கீழ் நிகழ்ந்த நிகழ்வுகளை எங்களுக்கு மட்டுமல்லாது முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த அநியாயங்களை எண்ணிப்பார்க்க வேண்டும். மத வழிபாடுகள், நம்பிக்கைகள், தளங்கள் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. இதன் விளைவுகள் தான் இன்று மனித உரிமைகள் பேரவையில் இலங்கை உட்பட உலக நாடுகள் அனைத்தும் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு இந்த தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து எடுக்கும் முயற்சிதான் எதிர்காலத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கப்போகின்றது.
அந்த தீர்மானத்தில் வெறுமனே போர்க்குற்றங்கள் நடந்துள்ளது அதை விசாரிக்க வேண்டும், தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது மட்டும் அல்ல இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்றால் முஸ்லிம்கள் வேறாக செயற்பட முடியாது. நாங்கள் மதத்தினால் வேறாக இருந்தாலும் தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிழ் மக்களின் தாயகம் முஸ்லிம் மக்களினதும் சொந்தம் என்றுதான் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அதேபோல் சர்வதேச தலையீடுகளின் மூலமாக எமக்கு இந்த தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை நாம் கொண்டுள்ளோம். அதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. அதில் முஸ்லிம்களும் எம்முடன் ஒன்றிணைந்து பயணிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதை முஸ்லிம்கள் இழந்துவிடக் கூடாது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வெறுமனே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அவர்களின் சிங்கள வாக்குகளில் மாத்திரம் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இந்த தேர்தலின் போது தமிழ் முஸ்லிம் மக்களின் தீர்மானம் தான் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதம் இல்லாது, சர்வதேச தலையீடுகள் இல்லாது இந்த நாட்டில் நாம் ஒரு ஜனநாயக புரட்சிக்கு வித்திட்டுள்ளோம்.திட்டுள்ளோம். இந்த புரட்சியில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சம பங்கு உள்ளது. எனவே அரசியல் தீர்வு ஒன்று ஏற்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும், நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். ஜனாதிபதியின் தேர்தல் அறிக்கையில் கூறியதைப்போல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டிருந்தால் அந்த நிலங்களில் முஸ்லிம்கள் குடியமர எங்களாலான அனைத்து விடயங்களையும் முன்னெடுப்போம். அதேபோல் தமிழ் பேசும் மக்கள் எங்கு துன்பப்படுகின்றார்களோ அவர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.