தமிழர்களுக்கு சரியான அரசியல் தலைமை இல்லை – குகேந்திரன்

தமிழர்களுக்கு சரியான அரசியல் தலைமைகள் கிடைக்காமையே தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார்.

K-V-Kukantheran-epdp

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மானிப்பாய் பகுதி இளைஞர் அணியின் அங்குரார்ப்பண நிகழ்வு மானிப்பாய் கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (17) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வல்லமை உடைய இளைஞர், யுவதிகளின் திறமைகளை பயன்படுத்தி எமது பகுதி அபிவிருத்திகளை மேம்படுத்துவதற்கு சரியான ஓர் அரசியல் தலைமை தேவை.

கடந்த காலங்களில் பல இளைஞர் அமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால், அவை ஒவ்வொன்றும் தவறானவர்களது வழிநடத்தல்களால் திசைமாறி மிகமோசமான அழிவுகளை சந்திக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சமூகத்தினது அதிகளவான வளர்ச்சியை தூக்கிவிடும் சக்தியாக இளைஞர்களே விளங்குகின்றனர்.

அகிம்சைவழி, ஆயுதவழி ஆகியவற்றை எதிர்கொண்டு மோசமான அழிவுகளை கடந்து எமது இளைஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

தற்போதும் சில இளைஞர்கள், தேவையற்ற வழிகளில் திட்டமிட்ட வகையில் மாற்றப்பட்டு வருவது வேதனையாக உள்ளது.

வாள்வெட்டு கலாசாரம் எமது பகுதியில் தலை விரித்தாடுகின்றது. போதைவஸ்து விநியோகம் தடல்புடலாக நடைபெறுகிறது.

இவற்றை தடுத்துநிறுத்த வேண்டியது இளைஞர்களது பொறுப்பாகும். ஏற்கெனவே அழிந்துபோன எமது இனம் எதற்காக மறுபடியும் இத்தகைய தீய வழிகளை நாடுகின்றனர் என நமக்கு நாமே கேட்கவேண்டிய கேள்வியாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts