தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியரை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு!

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி லண்டனிலுள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட போது, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து லண்டன் தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்னான்டோ மீது 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்தநிலையில் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நேற்று(திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது பிரியங்க பெர்னாண்டோவை குற்றவாளி எனத் தெரிவித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்றைய வழக்கு விசாரணையின் போது பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவோ அல்லது உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இருந்தோ எவரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாகவே பிணையற்ற பிடியாணை வழங்கி லண்டன் வெஸ்ஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்ப்பளித்துள்ளது.

Related Posts