தமிழர்களுக்குள் பிரிவினை இருந்தால் அரசு இனவழிப்பை இலகுவாக நிறைவேற்றும்!- பொ.கஜேந்திரகுமார்

Kajentherakumarஎன்றைக்கு ஒரு தமிழனை அடித்தால் ஒட்டுமொத்த தமிழினமும் கொதிக்கிறதோ அன்றுதான் எங்கள் இனத்தின் விடுதலை சாத்தியப்படும். அதேபோன்று தான் வலி. வடக்கு மக்களுடைய பிரச்சினைகளுக்காக அவர்களே போராடட்டும் என்று விட்டு விடாமல் தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு போராட வேண்டும்.

நாம் பிரிந்து நின்றால் இந்த அரசு தனது இன அழிப்பபை இலவுவாக நிறைவேற்றிக் கொள்ளும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து வலி. வடக்கு பிரதேசத்தை விடுவிக்க வலியுறுத்தி நேற்று அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது இவ்வாறு தெரிவித்த அவர், அங்கு மேலும் கூறுகையில்,

போராட்டம் மாபெரும் வெற்றியைக் கொடுத்துள்ளது. போராட்டம் நடைபெறும் சூழலை வைத்தே போராட்டத்தின் வெற்றி தீர்மானிக்கப்படும். அந்த வகையில் பாரிய அடக்குமுறைக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டம் பெரும் வெற்றியாகும்.

யுத்தம் நிறைவடைந்து 3 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இன்று யாழ். மாவட்டத்தில் சூழல் மோசமாகிக் கொண்டிருக்கின்றது. அந்த நிலையில்தான் இந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

அடக்குமுறைக்குள் உட்பட்டிருக்கும் மக்கள் அதை தாண்டி, தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருக்கின்றமை. தெளிவான செய்தியொன்றை உலகத்திற்கு கொடுக்கின்றது.

யாழ். மாவட்டத்தில பல வழிகளில் எங்கள் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மீள்குடியேற்றப் பிரச்சினை மட்டுமல்லாமல் பல்கலைக்கழக மாணவர்களுடைய பிரச்சினை, காணாமல்போகும் பிரச்சினை என பல கோணங்களில் நாம் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

பாதிக்கப்படும் ஒவ்வொரு தமிழனுடைய போராட்டத்தையும் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் தங்கள் போராட்டமாக கருத வேண்டும். அவ்வாறு கருதினால் இன்று நடைபெறும் போராட்டங்களை விடவும் மிகப் பெரிய போராட்டம் எதிர்வரும் காலத்தில் நடக்கும்.

வலி. வடக்கு மக்களுடைய பிரச்சினைகளுக்காக அவர்களே போராடட்டும் என்று விட்டு விட்டால் அரசு தனது இன அழிப்பை இலவுவாக நிறைவுக்குக் கொண்டுவிடும். என்றைக்கு ஒரு தமிழனை தொட்டால் ஒட்டுமொத்த தமிழினமும் கொதித்தெழுகிறதோ அன்றுதான் எங்கள் இனத்தின் விடுதலை சாத்தியப்படும்.

வலி. வடக்கு மக்களின் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொண்டுவிட்டு சென்ற பின்னர் தான் போராட்டத்தைக் குழப்ப இராணுவப் புலனாய்வாளர்களால் முயற்சி எடுக்கப்பட்டது.

ரணில் ஒரு சிங்களவர். தமிழர்தான் பிரச்சினை. இதுதான் இராணுவத்தினரின் மனோநிலை. தமிழர்களை நிரந்தர எதிரியாக பார்க்கும் மனோநிலையே அவர்களிடம் இருக்கின்றது என்பதை நாம் உணரவேண்டும்.

அந்த மனோநிலையுடன் ஒரு இராணுவச் சிப்பாய் இங்கிருந்தாலும் எங்கள் நலன்கள் ஒருபோதும் சாத்தியப்படாது என கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.

Related Posts