தமிழர்களுக்காக எதுவும் செய்ய முடியவில்லை: சென்னையில் முதலமைச்சர் சி.வி

இலங்கையில் தமிழர் பகுதிகளில் எங்களால் தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. இதற்காக வருந்துகிறோம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னஷ்வரன் தெரிவித்துள்ளார்.

wigneswaran__vick

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள வித்யோதயா பள்ளியில் இன்று கே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது,

‘இலங்கை வாழ் வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் தமிழ் பேசும் மக்கள் சார்பாக 1987ஆம் ஆண்டில் ஏற்பட்ட உடன் படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டது. ஒற்றை ஆட்சி அரசியல் சட்டத்தின் கீழ் உண்மையான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியவில்லை. அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியதிகாரத்திலுள்ள மத்திய அரசின் கையில் உள்ளது.

அதனால், இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழர் நலனுக்காக பாடுபட முடியவில்லை. அப்பகுதி இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது அங்கு இந்த நிலைமை தான் உள்ளது.

எங்களை சிங்கள அரசு செயற்பட விடாமல் தடுத்து வருகிறது. அதுதான் அவர்களது முக்கிய குறிக்கோளாக உள்ளது. என்னைக் கேள்வி கேட்கிறார்கள். அதிகாரமில்லாத வட மாகாண சபையில் முதல்வராக ஏன் இருக்கிறீர்கள் என கேள்வி கேட்கிறார்கள்.

தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. அது, தமிழ் பேசும் மக்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. கிழக்கு மாகாணத்தில் சிங்களர் ஊடுருவல்கள் அதிகரித்து வருகிறது’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts