தமது பூர்வீகக் காணிகளை ஆக்கிரமித்துள்ள இராணவத்தினர் தற்போது தமது வாழ்வாதாராத்தையும் முடக்க முயற்சிப்பதாக முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பாக சிறிய எரிபொருள் விற்பனை நிலையத்தினை நடத்திவந்த ஒருவரின் கடையை அப்புறப்படுத்துமாறு முள்ளியவளை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த எரிபொருள் கடையினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், இது இராணுவத்திற்கு ஆபத்தாக அமையும் என இராணுவம் முறையிட்டுள்ளதற்கு அமையவே கடையை மூடுமாறு முள்ளியவளை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக குறித்த கடை உரிமையாளர் தெரிவிக்கையில், ”எமது காணிகளை இராணவத்தினர் அத்துமீறி பிடித்துவைத்துக் கொண்டு எமது நிலங்களில் வாழ்வாதாரங்களை வருமானங்களை எம்மை பெற விடாது தாமே அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில் விடுவிக்கப்பட்ட தமக்குரிய நிலத்தில் கடன்களை பெற்று சிறிய முதலீட்டை செய்து இந்த வியாபார நிலையத்தினை நடத்திவரும் நிலையில் இராணுவத்தின் ஏவலில் பொலிஸார் தமது நடவடிக்கைக்கு தடைபோட்டிருப்பது வேதனை அளிக்கிறது.
இராணுவம் எமது நிலங்களை விடுவித்து விட்டதாக கூறிக்கொண்டு விடுவித்த எமது நிலங்களில் நாம் சுதந்திரமாக தொழில்செய்ய தடை விதிக்கிறது. இராணுவம் எமது நிலங்களை விட்டு வெளியேறினால் இந்த அவலநிலை எமக்கு இருக்காது” எனத் தெரிவித்தார்.